முன்பெல்லாம் தமிழகம் முழுக்க 20 திரையரங்கில் ஒரு இந்திப் படம் வெளியானாலே பெரிய சாதனை. சென்னையில் மூன்று அரங்குகளில் வெளியாகும். இப்போது நிலைமை வேறு.
தமிழ்ப் படங்களுக்கு இணையாக இந்திப் படங்களும் அதிக திரையரங்குகளில் வெளியாகின்றன. அதுவும் ரஜினி நடித்துள்ளார் என்றால் கேட்க வேண்டுமா... கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட அரங்குகளில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வெளியாகிறது ரா ஒன். இந்தியில் மட்டுமல்லாது, தமிழிலும் 'டப்பாகி' இந்தப் படம் வெளியாவதால் தியேட்டர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
தீபாவளிப் படங்களில் இப்போதைக்கு ஏழாம் அறிவு மட்டுமே வெளியாவது உறுதியாகியுள்ளது. இப்போதைக்கு ரா ஒன்னுக்கு தீபாவளிப் போட்டி ஏ ஆர் முருகதாஸின் இந்த நேரடி தமிழ்ப் படம்தான்!
ஒஸ்தி வரலாமா வேண்டாமா என தயங்கி நிற்கிறது. ரா ஒன்னுக்கு நல்ல திரையரங்குகள் பெருமளவு ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்தப் படம் வெளிவராது என்றே தெரிகிறது.
தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாக கட்டாயம் ரிலீசாகிவிடும் என்று சொல்லப்பட்ட விஜய்யின் வேலாயுதம் படத்துக்கு இன்னமும் நல்ல அரங்குகள் கிடைக்கவில்லை என்கிறார்கள். இதனால் அந்தப் படம் குறித்த தேதியில் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், சொன்னபடி வெளியாகும் வேலாயுதம் என தயாரிப்பாளர் தரப்பில் உறுதியாக உள்ளனர்.
மயக்கம் என்ன படம் ஏற்கெனவே ரேஸிலிருந்து விலகிக் கொண்டது நினைவிருக்கலாம்.
Post a Comment