அதிக தமிழ்ப் படங்களுக்கு இசையமைக்க ஆசையாக உள்ளது என்றார் ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.
வசந்த பாலன் இயக்கத்தில் ஆதி-தன்ஷிகா ஜோடி நடித்துள்ள அரவான் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. டி சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. பின்னணிப் பாடகர் கார்த்திக் இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத அளவுக்கு முற்றிலும் வித்தியாசமான வரலாற்றுப் படமாக அரவான் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கில் நடந்தது. முதல் இசைத் தட்டை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட, இயக்குநர் மணிரத்னம் பெற்றுக்கொண்டார்.
விழாவில், ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், "தமிழ் ரசிகர்கள் மத்தியில் சினிமா பற்றிய ஞானம் வளர்ந்து இருக்கிறது. அவர்களின் ரசனை உயர்ந்திருக்கிறது. ஒரு படத்தின் 'டிரைலரை' பார்த்து, அது எப்படிப்பட்ட படம் என்பதை கணித்து விடுகிறார்கள்.
ஒரு சிறுவனிடம் ட்ரெய்லரைக் காட்டினால், அதுபற்றி அவன் என்ன சொல்கிறானோ அதுதான் உண்மையாகிறது. அதைவைத்தே அந்தப் படம் ஓடுமா ஓடாதா என்று கூறிவிடலாம்.
நான், தமிழ் படங்களை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்கிறேன்.
இந்த (அரவான்) பட காட்சிகளை பார்க்கும்போது, எனக்கும் அதிக தமிழ் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசை வந்து இருக்கிறது," என்றார்.
தமிழ்த் திரையுலகமே ஒரே இடத்தில் குவிந்துவிட்டது போல, ஏராளமான பிரமுகர்கள் இந்த விழாவுக்கு வந்திருந்தனர். குறிப்பாக, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் கேயார் ஆகியோர் தங்கள் அணியுடன் வந்து விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
பட அதிபர் டி.சிவா வரவேற்று பேசினார். இயக்குநர் வசந்தபாலன் நன்றி கூறினார்.
Post a Comment