சென்னை: முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் சென்னை, டெல்லி, ஹைதராபாத் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு வலுக்கட்டாயமாக விற்க வைத்த விவகாரத்தில் தயாநிதி மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது சிபிஐ எப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்துள்ளது.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கையில், மாறன் சகோதரர்கள் தவிர மேக்சிஸ் அதிபரான ஆனந்த கிருஷ்ணன், மேக்சிஸ் குழுமத்தைச் சேர்ந்த 'அஸ்ட்ரோ' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரால்ஃப் மார்ஷல் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது கிரிமினல் சதி வழக்கு பதிவாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று தயாநிதி மாறனின் சென்னை போட் க்ளப் வீடு, சென்னை அலுவலகம், ஹைதராபாத்-டெல்லி வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
அதே போல சன் டிவி அலுவலகத்திலும் டெல்லியிலிருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இது தவிர மாறன் சகோதரர்களுக்கு மிக நெருக்கமான சிலரின் வீடுகளிலும் சோதனைகள் நடந்து வருகிறது.
தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவன அதிபராக இருந்த சிவசங்கரன் தனது செல்போன் சேவையை விரிவாக்க 2ஜி லைசென்ஸ் கோரி விண்ணப்பித்தார். ஆனால், அவருக்கு லைசென்ஸ் தர மறுத்த தயாநிதி, அவரது நிறுவன பங்குகளை மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு நிர்பந்தித்தார்.
இதையடுத்து வேறு வழியின்றி தனது நிறுவன பங்குகளை குறைந்த விலைக்கு ஆனந்த கிருஷ்ணனின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்றதாக சிபிஐயிடம் சிவசங்கரன் வாக்குமூலம் அளித்தார்.
இவ்வாறு ஏர்செல் பங்குகளில் பெரும்பாலானவை மேக்ஸிஸ் வசம் ஆன பின்னர், ஏர்செல் நிறுவனத்துக்கு தயாநிதி மாறன் 2ஜி லைசென்ஸ் ஒதுக்கினார். இதைத் தொடர்ந்து சன் டிவியின் டிடிஎச் சேவையில் மேக்ஸிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அஸ்ட்ரோ ரூ. 600 கோடியை முதலீடு செய்தது.
இது 2ஜி லைசென்சுக்காக மேக்ஸிஸ் தயாநிதி தரப்புக்கு தந்த லஞ்சம் என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பாக ரால்ஃப் மார்ஷலிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது, அதற்குக் கைமாறாக மாறன் குடும்பத்தினருக்குச் சொந்தமான சன் டி.வி.யில் முதலீடு செய்தது உள்ளிட்டவை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மார்ஷல் விளக்கமளித்தாகக் கூறப்பட்டது.
Post a Comment