2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மோசடிகள் நடந்ததால் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 17 பேரை கைது செய்து டெல்லி திகார் ஜெயிலில் அடைத்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ.க்கு ஆதாரங்களுடன் தெரிய வந்தது. குறிப்பாக 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்புத்துறை மந்திரியாக இருந்த தயாநிதிமாறன், தன் பதவியை தவறாக பயன்படுத்தி இருப்பதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.
அதன் விவரம் வருமாறு:-ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனத்தை பிரபல தொழில் அதிபர் சிவசங்கரன் தொடங்கி நடத்தி வந்தார். இவர் 2005-ல் தனது நிறுவனத்துக்கு 2ஜி அலைக்கற்றைகளை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு செய்யக்கோரி தயாநிதி மாறன் பொறுப்பு வகித்த மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்திடம் மனு செய்தார். ஏர்செல் நிறுவனத்துக்கு தயாநிதிமாறன் உரிமம் கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்தார். இதற்கிடையே சிவசங்கரனை அழைத்து பேசிய தயாநிதிமாறன், ஏர்செல் நிறுவனத்தை மலேசிய தொழில் அதிபர் அனந்தகிருஷ்ணன் நடத்தும் மாக்சிஸ் கம்ïனிகேசன்ஸ் நிறுவனத்துக்கு விற்று விடும்படி மிரட்டி நிர்ப்பந்தம் செய்தாராம். (இதை சி.பி.ஐ. யிடம் சிவசங்கரன் வாக்கு மூலமாக பதிவு செய்துள்ளார்).
இந்த சம்பவத்துக்கு பிறகு சிவசங்கரன் தன் ஏர்செல் நிறுவனத்தை வேறு வழியின்றி மாக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்து விட்டார். அடுத்த ஒரு மாதத்தில் மாக்சிஸ்-ஏர்செல் நிறுவனத்துக்கு தயாநிதி மாறன் ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ஒதுக்கீடு செய்தார். இந்த நிலையில் அனந்த கிருஷ்ணனின் மாக்சிஸ் நிறுவனம், கலாநிதி மாறனின் சன் டைரக்டில் ரூ.600 கோடி முதலீடு செய்தது. தயாநிதிமாறன் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ஒதுக்கீடு செய்து கொடுத்ததற்கு பிரதி பலனாக ரூ.600 கோடியை சன்டி.வி. குழுமத்துக்கு ஆனந்த கிருஷ்ணன் கொடுத்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மையானவைதான். அதற்கு ஆதாரங்கள் உள்ளது என்று சி.பி.ஐ. அறிவித்தது.
சன் டிவி,க்கு 323 தொலைபேசி இணைப்புகள்
இதையடுத்து மத்திய மந்திரி பதவியில் இருந்து விலகும்படி தயாநிதி மாறனுக்கு பிரதமர் மன்மோகன்சிங் உத்தர விட்டார். அதை ஏற்று தயா நிதிமாறன் கடந்த ஜுலை மாதம் 7-ந் தேதி மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சதிசெய்தல், பதவியை தவறாக பயன்படுத்துதல், லஞ்சம் கொடுத்தல், லஞ்சம் வாங்குதல் என பல பிரிவுகளில் தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ. குற்றஞ்சாட்டியது. இது தொடர்பான விசாரணை சூடு பிடித்த நிலையில் தயாநிதிமாறன், பி.எஸ்.என்.எல். நிறுவனத் தின் 323 தொலைபேசி இணைப்புகளை தனது குடும்ப நிறுவனமான சன் டி.வி.க்காக முறைகேடாக பயன் படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
தயாநிதிமாறன், முன்பு தொலைத் தொடர்பு துறை மந்திரியாக இருந்த போது, அமைச்சர் என்ற முறையில் அவருக்கு தொலை பேசி இணைப்பு கொடுக் கப்பட்டது. வெளியில் இருந்து பார்த்தால் ஒரே ஒரு இணைப்பு என்று மட்டுமே தெரியும். ஆனால் தயாநிதிமாறனின் சென்னை போட் ஹவுஸ் வீட்டுக்கு பி.எஸ். என்.எல். பொது மேலாளர் பெயரில் 323 தொலை பேசி இணைப்புகள் வழங்கப்பட்டன. அந்த இணைப்புகள் எல்லாம் தயாநிதிமாறன் வீட்டில் இருந்து சன் டி.வி. ஆபீசுக்கு பிரத்யேக கேபிள்கள் மூலம் திருப்பி விடப்பட்டு சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டன.
கட்டணம் அதிகமான ஐ.என்.டி.என். வசதிகளைக் கொண்ட இந்த 323 இணைப்புகள் மூலம், சன் டி.வி.க்கு தேவையான செய்திகள், தகவல்கள் உலகம் முழுவதிலும் இருந்து மிக விரைவாக பெறப்பட்டன. அந்த வகையில் அரசுக்கு ரூ.400 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக எஸ்.குருமூர்த்தி குற்றம் சாட்டி இருந்தார். 2ஜி ஒதுக்கீடு முறைகேடு மூலம் கலாநிதிமாறன், தயாநிதி மாறன் இருவரும் ரூ.600 கோடி ஆதாயம் பெற்றதாகவும், 323 தொலைபேசி இணைப்புகளை தவறாக பயன்படுத்தியதன் மூலம் அரசுக்கு ரூ.400 கோடி அவர்கள் இழப்பு ஏற்படுத்தியதாக சி.பி.ஐ. கருதுகிறது. இந்த இரு விவகாரங்களில் மட்டும் அரசுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு கலாநிதிமாறனும், தயாநிதி மாறனும் இழப்பு உண்டாக்கியதாக சி.பி.ஐ. குற்றஞ்சாட்டி இருப்பதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஆவணங்களை சி.பி.ஐ. சேகரித்துள்ளது. 323 தொலைபேசி இணைப்புகள் தவறாக பயன்படுத்தப்பட்டது குறித்து விவரங்களைத் தருமாறு தகவல் தொடர்புத்துறையை சி.பி.ஐ. கடந்த வாரம் கேட்டது. இதனால் தயாநிதிமாறனுக்கு நெருக்கடி அதிகரித்தது. இந்த நிலையில் சென்னை போட்ஹவுசில் உள்ள கலா நிதிமாறன், தயாநிதி மாறன் வீடுகளில் இன்று காலை சி.பி.ஐ. அதிகாரிககள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதற்காக டெல்லியில் இருந்து சி.பி.ஐ. சிறப்பு குழு சென்னை வந்திருந்தது. சென்னையில் சோதனை நடந்த அதே சமயத்தில் டெல்லி, ஐதராபாத்தில் உள்ள அவர்களது வீடுகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடத்தினார்கள். நீண்ட நேரம் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனை மூலம் பல முக்கிய தகவல்கள் சி.பி. ஐ.க்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது.
தயாநிதி மாறன்- கலாநிதி மாறன் மீது வழக்கு பதிவு
ஏர்செல் பங்குதாரரும், அப்பல்லோ குழுமங்களின் தலைவர் பிரதாப் ரெட்டியின் மகளுமான சுனிதா ரெட்டி வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். ஆனால் சுனிதா ரெட்டி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்கள் உறுதிபடுத்தப்பட்டதால் சன் டி.வி. நிர்வாக இயக்குனர் கலாநிதிமாறன், தயாநிதி மாறன், மாக்சிஸ் கம்னி கேசன்ஸ் உரிமையாளர் அனந்தகிருஷ்ணன், ஆஸ்ட்ரோ நெட்வொர்க் மூத்த செயல் அதிகாரி ரல்ப் மார்சல் ஆகிய 4 பேர் மீது சி.பி.ஐ. நேற்றே வழக்கு பதிவு செய்து விட்டது.
இந்தியத் தண்டனை சட்டம் 120(பி), 13(2), 13(1)(டி), மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவு 7,12 ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதே பிரிவுகளின் கீழ் சன் டி.வி., மாக்சிஸ் கம்ïனிகேசன்ஸ், ஆஸ்ட்ரோ நெட்வொர்க் ஆகிய மூன்று நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை சி.பி.ஐ. செய்தித் தொடர்பாளர் தாரிணி மிஸ்ரா நிருபர் களிடம் கூறினார். மாறன் சகோதரர்கள் வீடுகளில் சோதனை முடிந்த பிறகு, உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் சி.பி.ஐ. அடுத்தக் கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் தாரிணி மிஸ்ரா தெரிவித்தார்
Post a Comment