News Update :
Home » » ஜெயலலிதாவுக்கு கலைஞர் சவால்!

ஜெயலலிதாவுக்கு கலைஞர் சவால்!

Penulis : karthik on Monday, 10 October 2011 | 22:56

 
 
திருச்சி மேற்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு போட்டியிடுகிறார். நேருவை ஆதரித்து தேர்தல் பிரசார தி.மு.க பொதுக்கூட்டம் நேற்று இரவு திருச்சி புத்தூர் நால்ரோட்டில் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட தி.மு.க பொருளாளர் கே.கே.எம். தங்கராஜா தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசியதாவது:-
 
நான் உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். நேரிலே வந்து வாக்கு கேட்க வேண்டியவர் இன்று சிறைகோட்டையில் பூட்டப்பட்டு இருக்கிறார். தேர்தல் ஜனநாயக அடிப்படையில் நடைபெறும் என்பது இலக்கணம். ஆனால் இந்த ஆட்சியில் நடைபெறுகின்ற இடைத்தேர்தலும், உள்ளாட்சி தேர்தலும் ஜனநாயக அடிப் படையை குழிதோண்டி புதைத்து விட்டு நடத்தப்படுகிறது.
 
திருச்சி மாநகர உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தில் யார் யார் போட்டியிடுவார்கள் என்று அவர்களை சிறையில் தள்ளி, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
தி.மு.க.வின் முன்னோடிகள், நிர்வாகிகள் மீது வழக்குகள் பதிவு செய்தால் சிறையில் தள்ளினால் தொண்டர் ஓடி விடுவார்கள் என்றும், கட்சியில் இருக்க மாட்டார்கள் என்றும் தேர்தல் பணியாற்ற வரமாட்டார்கள் என எண்ணி காவல்துறையோடு கைகோர்த்து எதை வேண்டுமானாலும் செய்துகொண்டு இருக்கிறார்.
 
நான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். அடிக்க அடிக்க தான் பந்து மேலாக எழும். திராவிட முன்னேற்ற கழகத்தின் வீரர்கள், இளைஞர்கள், இதற்கெல்லாம் பயந்து அஞ்சுபவர்கள் அல்ல என்பதை திருச்சியில் நடைபெறும் இந்த மாபெரும் பொதுக்கூட்டம் எடுத்துக்காட்டுகிறது. திராவிட முன்னேற்ற கழகம் எத்தனையோ சோதனைகள், எவ்வளவோ வேதனைகளை எல்லாம் தாண்டித்தான் வந்தது.
 
இந்த கழகம் கொள்கையுடன் பட்டொளி வீசிக்கொண்டு இருக்கிறது. அண்ணாவின் லட்சியங்கள், கொள்கைகள், குறிக்கோளை நிறைவேற்றிக்கொண்டு ஆயிரம், ஆயிரம் இளைஞர்களை கொண்டு தாங்கி நிற்கிறது. திராவிட முன்னேற்ற கழகத்தை யாராலும், எந்த காலத்திலும், எந்த நிலையிலும் சிதைக்க முடியாது. தேர்தலில் தோல்வியை கண்டு பயப்படுகிறவன் நான் அல்ல.
 
அரசியலில் வெற்றி, தோல்வி வரும் போகும். வெற்றி கிடைக்கும் போது வெறியாட்டம் போடக் கூடாது. தோல்வி அடையும் போது துவண்டும் போக கூடாது. அப்படி சோர்ந்து விடாமல் இயக்கத்தை நடத்துகிறவன் தான் வீரன். அமைச்சர் பதவி பெறுவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல, தி.மு.க. தமிழர்களுக்காக தமிழர்களை வாழ வைப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் திமுக. தமிழ் இனம், திராவிட இனம், நாடு செழிக்க உலகம் செழிக்க இந்த இயக்கம் பாடுபட்டு கொண்டிருக்கிறது.
 
ஒரே ஒரு நேரு வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவோ, ஒரு மேயர் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவோ வாக்கு கேட்பதற்காக மட்டும் நான் இங்கே வரவில்லை. தமிழன் தமிழனாக வாழவேண்டுமானால் திராவிடலட்சியங்கள் காப்பாற்றப்படவேண்டும். அதனை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நம்மீது படை எடுக்க விடாமல் பாதுகாத்து கொள்ளவேண்டும் என்பது தான் நமது கொள்கை.
 
கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்- அமைச்சராக வந்த நான் இப்போது வெறும் கருணாநிதியாக வந்து நிற்கிறேன். முதல்-அமைச்சராக இருந்த போதும், வெறும் கருணாநிதியாக இருக்கிற இப்போதும் தமிழ் தமிழ் என்பதே எனது அரசியல் பணி ஆகும். 1926-ல் தமிழ் வளர்க்கும் பணியை தொடங்கினேன். மொழிப்பற்றும், மொழி பேசுகிற மக்கள் மீதும் நான் வைத்திருக்கிற பற்று, என்னை விட்டு அகலாது.
 
நான் மறைந்து விட்ட பிறகும் அது ஒலித்துக்கொண்டே தான் இருக்கும். அண்ணா அறிவாலயத்தை கருணாநிதி எப்படி கட்டினார்? அவரது யோக்கியதை தெரியாதா? கருணாநிதியை போல் தான் அவரது சீடர் நேருவும் இருப்பார் என்றும் ஜெயலலிதா பேசி இருக்கிறார். அண்ணா அறிவாலயம் கட்டுவதற்கான நிலத்தை 1972-ல் எப்படி வாங்கினோம் என்பதை இங்கே விளக்க விரும்புகிறேன்.
 
யாரோ ஒரு ஜமீன் இளைய மகன் சுப்புரத்தினம் நாயுடுவை மிரட்டி வாங்கியதாகவும், அதற்கான பத்திரத்தில் 10 பேருக்கு பதில் ஒரே நபர் மட்டும் கையெழுத்து பெற்றதாகவும் கூறி இருக்கிறார். இதற்கு ஆதாரமாக சர்க்காரியா கமிஷன் பற்றியும் பேசி இருக்கிறார்.
 
நான் அம்மையாருக்கு அன்போடு அறைகூவல் விடுகிறேன். 1972-ல் அறிவாலயம் மனை ஏறத்தாழ 25 கிரவுண்ட் நிலம் வாங்கி தி.மு.க. அறக்கட்டளை பெயரில் பதிவு செய்தோம். அதில் யார் யார் உறுப்பினர்கள் தெரியுமா? கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், 3-வது பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன்.
 
கிரைய பத்திரத்தில் ஒரு இடத்தில் கூட யாருடைய கையெழுத்தும் இல்லை என்றும் திருச்சியில் ஜெயலலிதா பேசியதால் நான் சென்னை அறிவாலயத்துடன் தொடர்பு கொண்டு ஆகாய விமானம் மூலம் அதன் நகலை இன்று காலை வரவழைத்தேன். 10 பேர் தி.மு.க. அறக்கட்டளைக்கு 9 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு கிரையம் செய்து கொடுத்து இருக்கிறார்கள்.
 
இதற்கான ஆதாரத்தை சென்னையில் இருந்து வரவழைத்து இருக்கிறேன் (கூட்டத்தினரை பார்த்து கிரைய பத்திரம் நகலை காட்டினார்) அந்த இடத்தில் தான் அறக்கட்டளை உருவாக்கி நான் தலைவராகவும், எம்.ஜி.ஆர். பொருளாளராகவும் இருந்தார். எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு விலகிய பின்னர் இப்போது மு.க. ஸ்டாலின் வரை அறக்கட்டளையில் இருக்கிறோம்.
 
நான் விடுக்கும் ஒரே ஒரு அறைகூவலுக்கு அம்மையார் பதில் அளிப்பாரா? ஜெய லலிதா இந்த சவாலை ஏற்றுக்கொள்கிறாரா? ஏற்றுக்கொண்டு எங்கள் தோழர்களை எல்லாம் நீதிமன்றத்திற்கு இழுக்கிற ஜெயலலிதா நீங்கள் நீதிமன்றத்திற்கு வர தயாரா? தயார் இல்லை என்றால் அதற்குரிய தண்டனையை அவரே தீர்த்துக்கொள்ளவேண்டும்.
 
இவ்வாறு கருணாநிதி பேசினார்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger