ராணா படத்தில் ரஜினி விரைவில் நடிப்பார் என இந்தி நடிகர் ஷாருக்கான் கூறினார். இந்தி நடிகர் ஷாருக் கான், கரீனா கபூர் நடித்துள்ள படம் 'ரா 1'. இந்த படம் தமிழில் டப் ஆகிறது. இதன் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது.
இயக்குனர் மணிரத்னம், நடிகை சுஹாசினி, தியேட்டர் அதிபர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன், சவுந்தர்யா ரஜினிகாந்த், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம், ஷாருக்கான் கூறியதாவது: இந்தப் படம் ஒரு புதிய முயற்சி. இதை தென்னிந்திய மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தமிழ், தெலுங்கில் டப் செய்கிறோம். தமிழில் திறமையான டெக்னீஷியன்கள் இருக்கிறார்கள். 'தமிழ் தெரியாமல் தமிழில் நடிப்பது கஷ்டம். மணிரத்னம் மாதிரியான இயக்குனர்கள் கேட்டால், வாய்பேசாமல் நடிப்பேன். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்துள்ளார். எனது சிறுவயதில் மும்பையில் ரஜினி பட ஷூட்டிங் நடந்தபோது, அதை ரசிகனாக சென்று பார்த்தேன்.
அப்போது, அவருடன் நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவருடன் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். அவருடைய மனிதநேயம் பார்த்து பிரமித்திருக்கிறேன். இந்தியாவில் பிரபலமான நடிகர் அவர். கமலும் ரஜினியும் திறமையானவர்கள். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. ரஜினி மாதிரி இன்னொருவர் நடிக்க முடியாது. ரஜினியின் உடல்நிலை நன்றாக இருக்கிறது.
'ராணா' படத்தின் ஷூட்டிங்கை எப்போது ஆரம்பிக்கலாம் என்கிற துடிதுடிப்புடன் அவர் இருக்கிறார். விரைவில் அதில் அவர் நடிப்பார். அதை நானும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு ஷாருக்கான் கூறினார். பின்னர் ரா ஒன் படத்தில் இடம்பெறும் சம்மக் சல்லோ பாடலுக்கு மேடையில் டான்ஸ் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தினார் ஷாருக்கான்.
Post a Comment