தாத்தா பாட்டி காலத்தில் 15 வயதில் திருமணம் செய்வது சதாரணமான விசயம். அதே நம் அப்பா அம்மா காலத்தில் 21 வயதானாலே பெண் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இன்றைக்கு நன்றாக படித்து கைநிறைய சம்பாதித்தாலும் சரியான பருவத்தில் திருமணம் செய்யாமல் 30 வயதுவரை தள்ளிப்போடுகின்றனர். இது உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நிபுணர்களின் கருத்து.
பருவம் பார்த்து விதை விதைக்க வேண்டும் அப்பொழுதுதான் சரியாக முளைக்கும் என்பது விவசாயத்திற்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும்தான் பொருந்தும் என்பது நிபுணர்களின் அறிவுரை. சரியான பருவத்தில் திருமணம் செய்வதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
சீக்கிரம் செட்டில் ஆகுங்க!
இன்றைய இளைய தலைமுறை கல்வியில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். நல்ல படிப்பு, அதற்கேற்ற வேலை, கைநிறைய சம்பளம் என்று ஒரு லட்சியத்தை மனதில் பதித்துக்கொண்டு அதை சாதித்தும் விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் படிப்புக்கேற்ற வேலை கிடைத்ததும் அதற்கு மேலும் தள்ளிப்போடாமல் தாமதமின்றி திருமணம் செய்து கொள்வது அவசியம். இன்றைய காலத்தில் 15 வயதிற்குள் பால்ய விவாகம் செய்வது சாத்தியமில்லை. ஆனால் இளம் பருவத்தில் அதாவது 21 வயதில் இருந்து 25 வயதிற்குள் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்திற்கு மாற முயற்சிக்கலாம்.
இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் பெற்றோர் நல்ல ஆரோக்கிய மாக இருப்பார்கள். அதனால் பிறக்கப்போகும் தங்கள் பேரன், பேத்திகளை அவர்கள் தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள். இதனால் தலையாய பிரச்சினையான குழந்தை வளர்ப்பது கூட தம்பதிகளுக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது.
18 முதல் 25 வயதில் திருமணம் செய்து கொண்ட 8ஆயிரம் இளம் தம்பதியரிடம் மேற்கொண்ட ஆய்வில் குடும்பத்தில் பெற்றோர் - குழந்தைகளிடையேயான உறவுமுறையில் அதிக அளவில் ஒரு ஒட்டுதல் இருந்தது. தலைமுறை இடைவெளிகள் அதிக்கம் இல்லை. இளம் வயது தம்பதியருக்குப் பிறந்த குழந்தைகள் அதிக புத்திசாலிகளாக இருந்தனர். திருமணம் காரணமாக அவர்களின் நடத்தையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருந்தது. இந்த வயதினருக்கு ஏற்படும் மன அழுத்தம் தடுக்கப்பட்டது.
உளவியல் சிக்கல்கள்
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் 15 வயதிற்குள்ளாகவே, இளமைப்பருவத்தில் அடியெடுத்து வைத்து விடுகிறோம். ஹார்மோன்களின் மாற்றத்தினால் உடல் தேவைகள் தொடங்கிவிடும். ஆனால் வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 30, 35 வயதுவரை உடல் தேவையை பூர்த்தி செய்யாமல் இயற்கைக்கு எதிராக வாழ முற்படுவதனால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.
சிசேரியன் பிரசவங்கள்
தாமதமான திருமணம் உடல் ரீதியாக வும், உளவியல் ரீதியாகவும் கூட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. கருத்தரிக்க தாமதம். அப்படியே கருத்தரித்தாலும் சுகப்பிரசவம் கேள்விக்குறி என்ற நிலை. காலதாமதமாக திருமணமானவர்களுக்கே அதிகமாக சிசேரியன் பிரசவம் நடக்கிறது.
பாட்டி காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்தவர்கள் அறுவைச் சிகிச்சையை அறிந்த தில்லை. அவர்கள் ஆரோக்கியமான வயதில் திருமணம் செய்து கர்ப்பமடைந்தனர். எளிதாக குழந்தை பெற்றுக் கொண்டனர். அதிகமாக சுகப்பிரசவங்களே நடந்தன. படிப்பு, வேலை, சொந்த காலில் நின்ற பிறகே இல்லறம் என்றெல்லாம் கூறி திருமணத்தை தாமதமாக செய்து கொள்கிறார்கள். இதனால் வயது முதிர்வடையும்போது உடல் வளைந்து கொடுக்கும் தன்மையை இழக்கிறது. இடுப்பெலும்பு வளைந்து கொடுக்கும் வயதைத்தாண்டி திருமணம் செய்துகொள்ளும்போது அநேக பெண்களுக்கு சிசேரியன் அவசியமாகி விடுகிறது.
தந்தையாகும் தகுதி
ஆண்கள், தாமதமாக திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தால் தவறான பழக்கம் உடையவர்களாகிறார்கள். இயற்கை இச்சைகளை தீர்ப்பதற்காக செக்ஸ் புத்தகம், பலான படங்கள், சுய இன்பம், இணைய தள தேடல் என மாற்று வழிகளில் இன்றைய இளைஞர்கள் பயணப்படும் பின்னணியில், தள்ளிப்போடப்படும் அவர்கள் திருமணம் இருக்கிறது.
இதனால் தற்காலிக உணர்வுத் தேவைகளை முறைகேடாக அணுகப்போய், அதனால் எயிட்ஸ் அதிகரிப்பு, கள்ளக்காதல் போன்ற கலாசார சீரழிவும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அதனால் திருமண சமயத்தில் வீரியம் குறைந்து தந்தையாகும் தகுதியை பலர் இழக்கின்றனர்.
ஆகவே இன்றைய பெற்றோர்களே நீங்கள் தாமதமாக திருமணம் செய்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை உங்களின் குழந்தைகளுக்காவது காலா காலத்தில் திருமணத்தை முடித்து வைத்து சீக்கிரம் பேரன் பேத்தியை பார்த்து செட்டில் ஆகும் வழியைப் பாருங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
Post a Comment