டீசல் விலை உயர்வு மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ரூ.50 கோடி கூடுதல் செலவு

சென்னை, செப். 15-
மத்திய அரசு டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியது. இதையடுத்து ஆம்னி பஸ், ஆட்டோக்கள், வாடகை கார்கள், கால் டாக்சி ஆகியவற்றின் கட்டணம் உடனடியாக உயர்ந்தது. ஆம்னி பஸ்களில் ரூ.30 கட்டணம் உயர்த்தப்பட்டது. அரசு போக்குவரத்து கழக பஸ்களில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தமிழ் நாட்டில் 20,000 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
டீசல் விலை உயர்வால் அரசு போக்குவரத்து கழகங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது. அரசு போக்குவரத்து கழகத்திற்கு குறைந்த விலையில் டீசல் விற்பனை செய்யப்பட்டாலும் கூட ரூ.500 கோடிக்கு மேல் கூடுதல் செலவு ஏற்படுகிறது.
இதனால் அரசு போக்குவரத்து கழகங்கள் பெரும் சவாலை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.50 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. டீசல் விலையேற்றத்தால் மாதத்திற்கு ரூ.4 1/2 கோடி இழப்பு ஏற்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மற்ற போக்குவரத்து கழகங்களும் டீசல் விலை உயர்வை எப்படி சமாளிக்க போகிறது என்று தெரியவில்லை அதிகாரிகள் விழி பிதுங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு ஓரளவிற்கு வருவாயை எட்டிப் பார்த்த அரசு போக்கு வரத்து கழகங்கள் மீண்டும் நஷ்டத்திற்கு தள்ளப்படும் நிலை உருவாகி உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post a Comment