அஜீத்தின் பில்லா-2 பாடல் வெளியீடும், கமலின் விஸ்வரூபம் பட டிரெய்லர் ரிலீசும் வருகிற மே 1-ந்தேதி ஒரே நாளில் நடக்கிறது. பில்லா-2 பாடல்களை பிரமாண்ட விழா நடத்தி வெளியிட தயாரிப்பு தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. முன்னணி நடிகர், நடிகைகளையும் விழாவுக்கு அழைக்க திட்டமிட்டனர்.
அஜீத் ஆடம்பரமில்லாமல் எளிமையாக பாடல்களை வெளியிட விரும்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரமாண்ட விழா நடத்தாமல் பாடல்களை ரிலீஸ் செய்கின்றனர்.
இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் பின்னணி பாடகர்கள் ஸ்டெப்னி, ஸ்வெதா பண்டிட், தன் விஷா, சுவிசுரேஷ், ஆண்ட்ரியா, ஜெர்மையா, ரஞ்சித் ஆகியோர் பாடல்களை பாடி உள்ளனர். அஜீத் பிறந்த நாள் மே 1-ந்தேதி என்பதால் அன்றைய தினம் பில்லா-2 பாடல்கள் வெளியாவதை ரசிகர்கள் ஆர்வமாய் எதிர் பார்க்கின்றனர்.
கமலின் விஸ்வரூபம் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. தற்போது படக் குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். இந்த படத்தில் கமலின் கெட்டப் எப்படி இருக்கும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
முதல் தடவையாக மே 1-ந்தேதி டிரைலர் மூலம் அவரது தோற்றம் தெரிய வர உள்ளது. தியேட்டர்களிலும் இணைய தளங்களிலும் அன்றைய தினம் விஸ்வரூபம் படத்தின் டிரெய்லரை வெளியிடுகின்றனர்.
30 நொடிகள் பார்க்கும் வகையில் இந்த டிரைலரை தயார் செய்துள்ளனர். படத்தின் முக்கிய சீன்கள் இந்த டிரைலரில் சேர்க்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் கமல் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார்.
Post a Comment