ராஜீவ் காந்தியைக் கொன்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குப் பெரும் பாதகம் ஏற்படும் என்பதை பிரபாகரன் உணராமலா இருந்திருப்பார். மேலும், ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்கு அவர் என்ன முட்டாளா. இந்த காரியத்தை செய்தது அமெரிக்காதான். பிரபாகரனுக்கே தெரியாமல், தமிழகத்தில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை வைத்து ராஜீவ் காந்தியை அமெரிக்காதான் கொலை செய்துள்ளது என்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ திட்டத்தின்படிதான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தானாகவே முட்டாள்தனமான தீர்மானங்களை எடுத்திருக்க மாட்டார் என நான் திடமாக நம்புகிறேன்.
ராஜீவை படுகொலை செய்வதன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஏற்படக் கூடிய பாதக நிலைமைகள் குறித்து பிராபகரன் கவனம் செலுத்தாமல் இருந்திருக்க முடியாது. பிரபாகரனுக்கு தெரியாமல் தமிழகத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அமெரிக்க உளவுப் பிரிவு, ராஜீவை படுகொலை செய்யும் ஒப்பந்தத்தை ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை.
காந்தி குடும்பத்தினர் இந்தியாவை ஆட்சி செய்யும் வரையில் தெற்காசிய பிராந்தியத்தில் தங்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்திருந்ததால்தான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
Post a Comment