நாகர்கோவில்::குமரி மாவட்டம் மேற்கு கடற்கரை கிராமங்களான ராமன்துறை, இரயுமன் துறை, பூத்துறை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கேரள கடலில் மீன்பிடித் தொழில் செய்வது வழக்கம். இதுபோல பூத்துறையை சேர்ந்த பிரடி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த அஜீஸ் டிங்கு(20), கிலாரி, ஜான்சன், முத்தப்பன், அலெக் சாண்டர், பிரான்சிஸ், பிங்செரியன், மார்ட்டின், ஆன்டனி, குளச்சலை சேர்ந்த ஜெலஸ்டின் ஆகி யோரும் கேரளாவை சேர்ந்த சில மீனவர்களும் இணைந்து கொல்லம் கடலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்கச் சென்றனர்.
நேற்று காலை ஆழ்கடல் பகுதியில் இவர்கள் வலை வீசி மீன்களை பிடிக்க காத்திருந்த போது அந்த வழியாக ஆயில் டேங்கர் ஏற்றிய சரக்கு கப்பல் வந்தது. திடீரென கப்பலில் இருந்தவர்கள் விசைப்படகின் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் படகின் மேல்தளத்தில் நின்று கொண்டிருந்த அஜீஸ் டிங்கு, ஜெலஸ்டின் ஆகியோர் மீது குண்டுகள் பாய்ந்தன. அவர்கள் படகு தளத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர்.
அஜீஸ் டிங்கு, ஜெலஸ்டின் ஆகியோரின் அலறலைக் கேட்டு படகின் கீழ்தளத்தில் இருந்தவர்கள் மேல்தளத்திற்கு ஓடி வந்தனர். அதற்குள் மீனவர்களை சுட்ட கப்பல் அங்கிருந்து வேகமாக சென்று விட்டது. இதுபற்றி படகில் இருந்தவர்கள் பூத்துறையில் உள்ள உறவினர்களுக்கும், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த தகவல் கொல்லம் மீன்பிடித்துறைமுக அதிகாரிகளுக்கு கூறப்பட்டது.
உடனே அதிகாரிகள் கடலோர காவல்படையினரின் உதவியுடன் தப்பிச் சென்ற கப்பலை விரட்டிச் சென்று மடக்கினர். நடுக்கடலில் பிடிபட்ட அந்த கப்பல் பின்னர் கொச்சி துறை முகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கப்பலின் மாலுமிகளிடம் துறைமுக அதிகாரிகள் விசாரித்தனர். இத்தாலி கப்பல் மாலுமிகள் கூறும்போது, விசைப்படகில் இருந்தவர்கள் கடற்கொள்ளையர்கள் என கருதி துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்தனர்.
இருந்தாலும் மாலுமி கூறிய காரணத்தில் உண்மை இருக்கிறதா? என்பதை கண்டறிய அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே குண்டடிப்பட்டு இறந்து போன குமரி மீனவர்கள் அஜீஸ்டிங்கு, ஜெலஸ்டின் ஆகியோரின் உறவினர்கள் தகவலறிந்து அழுது புலம்பினர்.
தற்போது இருவரின் உடலும் கொச்சியில் இருந்து இன்று மாலை பூத்துறை கிராமத்திற்கு வந்து சேரும் என்று தெரிகிறது. அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பூத்துறை, இரயுமன்துறை மற்றும் குளச்சல் பகுதியில் இருந்து ஏராளமான மீனவர்கள் குடும்பத்துடன் பூத்துறை ஆலயம் முன்பு கூடினர். இதனால் மீனவ கிராமங்களே சோகத்தில் ஆழ்ந்தது. பெரும்பாலான மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.வீடுகள் முன்பு கறுப்புக் கொடி கட்டி துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.
துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட அஜீஸ் டிங்கு பெற்றோரை இழந்தவர். இவருக்கு அபினா சேவியர்(17), அபுனா சேவியர் (15) என்ற இரண்டு சகோதரிகள் மட்டுமே உள்ளனர். அஜீஸ் டிங்குக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சகோதரிகளை திருமணம் செய்து கொடுத்த பின்பு தான் அவர் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் கொலையுண்டதால் அவரது சகோதரிகள் இருவரும் வாழ்க்கையே இருண்டு போனதாக கூறி கதறி அழுதனர்.
அவர்களை கண்டு கிராமமே கண்ணீர் வடித்தது. இறந்து போன இன்னொரு மீனவரான ஜெலஸ்டின் குளச்சலை சேர்ந்தவர். தற்போது குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வந்தார். அவர் இறந்த தகவல் குளச்சலில் உள்ள அவரது உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இறந்து போன மீனவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வரும் பணியிலும் அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை பெற்றுத் தரும் முயற்சியிலும் மீனவர் சங்க பிரதிநிதிகளும், வள்ளவிளை ஆலய பங்குதந்தை பிரடியும் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றி தெற்காசிய மீனவர் தோழமை கூட்டமைப் பின் பொதுச் செயலாளர் பாதிரியார் சர்ச்சில் கூறியதாவது:-
2 மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கடலுக்கு செல்லும் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடல் தொழிலுக்கு சென்று இத்தாலி கப்பல் மாலுமிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட குமரி மீனவர்கள் அஜீஸ் டிங்கு, ஜெலஸ்டின் ஆகியோரின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
அதோடு, மீனவர்களை ஈவு, இரக்கமின்றி சுட்டுக் கொன்ற இத்தாலி கப்பல் நிறுவனமும் நஷ்டஈடு தர வேண்டும். சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு இருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.50 லட்சம் நிவாரணநிதி அளிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment