Thursday, 4 October 2012
கடுமையான மின்பற்றாக்குறையை சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க மின்சாரவாரியம் முடிவு கடுமையான மின்பற்றாக்குறையை சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க மின்சாரவாரியம் முடிவு
மின்சார வாரியத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தில் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் மூலம் 1,905 மெகாவாட், புனல் மின்நிலையங்கள் மூலம் 370 மெகாவாட், எரிவாயு மின்நிலையங்கள் மூலம் 150 மெகாவாட், தனியார் மின்நிறுவனங்கள் மூலம் 740 மெகாவாட் பெறப்படுகிறது.
மத்திய அரசின் தேசிய அனல்மின் கழகம் மூலம் 850 மெகாவாட், தேசிய அணுமின்கழகம் மூலம் 375 மெகாவாட், நெய்வேலி அனல் மின்நிலையம் மூலம் 850 மெகாவாட், தமிழகம் மற்றும் பிறமாநிலங்களிலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. இதன் மூலம் 5,740 மெகாவாட் மின்சாரம் தற்போது கிடைத்து வருகிறது.
காற்றாலைகள் மூலம் சராசரியாக 2,400 மெகாவாட் உட்பட 8,140 மெகாவாட் மின்சாரம் தான் தற்போது கிடைக்கிறது. ஆனால் நமக்கு சராசரியாக 12 ஆயிரம் மெகாவாட் தேவைப்படுகிறது. இதனால் 3,860 மெகாவாட் வரை பற்றாக்குறை ஏற்படுகிறது. காற்றாலைகளில் உறுதியாக 3 ஆயிரம் மெகாவாட் வரை கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலையும் உள்ளது.
காற்று வீசும் காலமும் ஓரிரு நாட்களில் முடிவடைய இருப்பதால் நிலைமை மேலும் மோசமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தான் தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் 10 மணி நேரத்திற்கு மேல் மின்தடை செய்யப்படுகிறது.
அணைக்கட்டு மற்றும் நீர்நிலைகள் மூலம் கடந்த ஆண்டு ஜுன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவ மழை பெய்த காலகட்டத்தில் 214 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் தற்போது நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனதால் ஜுன் முதல் செப்டம்பர் வரை 85 கோடி யூனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதனால் 129 கோடி யூனிட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டதன் மூலம் சராசரியாக 60 சதவீதம் மின்சாரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. மின்பற்றாக்குறைக்கு மத்திய தொகுப்பிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு குறைவு உட்பட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் தமிழகத்தில் தனிநபர் மின் நுகர்வு 8 சதவிதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதேபோல் தமிழகத்தில் வழக்கமாக அதிகபட்சமாக மின்நுகர்வு நேரம் மாலை 6 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை இருந்தது. தற்போது அந்த நேரம் மாற்றப்பட்டு இரவு 11 மணிக்கு மேல் அதிகம் மின்நுகர்வு செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் 2,500 மெகாவாட் வரை மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையை போக்க 2012-2013-ம் ஆண்டில் தமிழக அரசு 3020 கோடியே 25 லட்சம் ரூபாய் மானிய அளித்துள்ளது. அத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உடனடித் தேவைக்காக தற்போது முன்பணமாக 1,000 கோடி ரூபாயை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு வழங்கி உள்ளது.
தென்மேற்கு பருவ மழைக்கும், வடகிழக்கு பருவ மழைக்கும் இடைப்பட்ட இரண்டு முதல் மூன்று வாரத்திற்கு மின்சார நிலைமையை சமாளிக்க அதாவது செப்டம்பர் கடைசி வாரத்திலிருந்து அக்டோபர் முதல் இரண்டு வாரங்களுக்கு தேவையான மின்சாரத்தை சமாளிக்க போர்க்கால நடவடிக்கையை தமிழ்நாடு மின்சார வாரியம் எடுத்து வருகிறது.
நிலைமையை வெளிமாநிலங்களிலிருந்து 10,300 மில்லியன் யூனிட் வாங்க கடந்த மே மாதம் ஒப்புதல் கேட்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ஒப்புதல் கோரப்பட்டது. இதனை பரிசீலித்த ஆணையம் 2012 மே மாதத்திலிருந்து வரும் 2013 மே மாதம் வரை 4 ஆயிரம் மில்லியன் யூனிட் வரை மின்சாரம் வாங்க அனுமதி அளித்தது. இதில் 500 மில்லியன் யூனிட் மின்சாரம் பெறப்பட்டுள்ளது.
மீதம் உள்ள 3,500 மில்லியன் யூனிட் அதாவது 600 மெகாவாட் மின்சாரத்தை நடப்பு மாதமான 2012 அக்டோபர் மாதத்திலிருந்து 2013 மே மாதம் வரை எட்டு மாதத்திற்கு யூனிட் ரூ.4.13 முதல் ரூ.5 வரை கட்டணத்தில் வாங்கி கொள்ள அனுமதித்துள்ளது. ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது.
இவ்வாறு மின்துறை அதிகாரிகள் கூறினர்.