அரசியல் அழுக்கு நிறைந்தது; நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை தராது: அன்னா ஹசாரே பேட்டி அரசியல் அழுக்கு நிறைந்தது; நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை தராது: அன்னா ஹசாரே பேட்டி
புதுடெல்லி, அக். 1-
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி பிரபல காந்தியவாதியான அன்னா ஹசாரே போராடி வருகிறார். இனி உண்ணாவிரதம் இருக்க மாட்டேன், ஆனால் எனது போராட்டம் தொடரும் என்று ஏற்கனவே அறிவித்துள்ள அன்னா ஹசாரே, அடுத்தக்கட்டமாக மேற்கொள்ள வேண்டிய போராட்டம் குறித்து தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்துவதற்காக நேற்று டெல்லி சென்றார்.
அங்கு அவர் ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசியல் பாதை என்பது புனிதமான ஒன்றல்ல. அரசியல் என்பது முழுக்க அழுக்குகள் படிந்த ஒன்றாகும். ஆனால் போராட்டப்பாதை என்பது புனிதமானது. நாட்டுக்கு அரசியலால் ஒரு எதிர்காலத்தை வழங்க முடியாது. ஆனால் ஒரு பெரிய இயக்கத்தால் அது முடியும்.
அந்த வகையில்தான் அரசியல் என்பது சரியான இலக்காக இருக்காது என்று நான் கூறினேன். நான் மாற்று சக்தியாக எதையும் அளிக்கவில்லை. மாற்றாக ஒன்றைத் தரவேண்டும் என்று என்னைக் கேட்டபோது, இது நல்ல யோசனைதான், ஆனால் அதற்கு (எப்படி ஒரு மாற்றுசக்தி அமைய வேண்டும் என்பது குறித்து) நான் கேட்கிற 5 அல்லது 6 கேள்விகளுக்கு விடை தேவை என்று கூறினேன். ஆனால் அந்தக் கேள்விகளுக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை.
(புதிய கட்சிக்கு உறுப்பினர்களை சேர்ப்பது எப்படி, பணம் எங்கிருந்து வரும், தேர்தல்களில் வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்வது என்பது உள்ளிட்ட கேள்விகளையே அன்னா ஹசாரே கேட்டார்.).
நான் அரசியலில் குதிக்க வேண்டும் என்று கருதியிருந்தால், அதை நான் முன்பே செய்திருக்க முடியும். நான் ஊராட்சி தேர்தலில்கூட போட்டியிட்டது இல்லை. நான் மாற்று சக்தி பற்றி பேசியபோது, அரசியலை மாற்று சக்தியாக கூறியது கிடையாது.
அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக தொண்டர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், மற்றவர்களை இரண்டு நாட்கள் சந்தித்துப் பேசுவேன். அரசியல் நமக்கு நல்லதொரு எதிர்காலத்தை வழங்கும் என்றால், பொன் வாத்து என்று கருதப்பட்ட இந்தியா ஏன் பொன்னை அடமானம் வைக்கிற நிலைக்கு வரவேண்டும். அரசியல் மூலமாக இந்த நாடு பிரகாசமான எதிர்காலத்தை அடைய முடியாது.
இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.
தனது குழுவின் முக்கிய உறுப்பினராக திகழ்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலை விட்டுப் பிரிந்து வந்த பின்னர் அன்னா ஹசாரே டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment