போடி மலையில் பற்றி எரியும் உயர் ரக மரங்கள்: மரக்கரிக்காக தீவைப்பு போடி மலையில் பற்றி எரியும் உயர் ரக மரங்கள்: மரக்கரிக்காக தீவைப்பு
போடி, அக்.1-
தேனி மாவட்டம் போடியை சுற்றி ஏராளமான மலைகள் உள்ளது. இங்குள்ள வடக்குமலை, வடமலை மீனாட்சி அம்மன் மலை, முட்டுக்கோம்பை, உலகுருட்டி மலை, ஆகிய மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சமூக விரோத கும்பல் வைத்த தீ பற்றி எரிந்து வருகிறது.
தற்போது பலமான காற்று வீசி வருவதால் தீ மேலும் பரவி வருகிறது. மலையில் தீபிடிப்பதால் விலை உயர்ந்த மரங்களான தேக்கு, சந்தனம், பலா உள்ளிட்ட அரியவகை மரங்கள் தீயில் கருகி நாசமாகி வருகின்றன.
2 நாட்களாக பற்றி எரியும் தீயை அணைக்க போடி வனத்துறையினர் போராடி வருகின்றனர். மலைகளில் தீ பிடிப்பதால் காட்டு யானைகள், மான்கள், வரை யாடுகள், காட்டு எருமைகள் போன்ற அரியவகை விலங்குகள் இடம்பெயர தொடங்கியுள்ளன.
இதுபோன்று அடிக்கடி சமூகவிரோத கும்பல் போடியை சுற்றி உள்ள மலைப்பகுதிகளில் தீ வைப்பதால் அரியவகை மரங்கள் அழிந்தும், வனவிலங்குகள் இடம் பெயர்ந்தும் வருகின்றன.
தொடர் தீ காரணமாக மலையில் உள்ள மான்கள் அவ்வப்போது ரோட்டோர பகுதிகளுக்கு வருவதால் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது.
மர கரிக்கட்டைக்காக சமூகவிரோத கும்பல் மலையில் தீ வைப்பதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். இதுகுறித்து போடி வனத்துறையினர் கூறும்போது, போடி பகுதியில் உள்ள மலைகளில் தீ வைப்பவர்களை பிடிக்க வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மலையில் எரிந்து வரும் தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீ வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மர கரிக்கட்டைக்காக தீவைக்கும் கும்பல் திருந்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Post a Comment