சிம்னி விளக்கு சரிந்து விழுந்ததில் பிளஸ் 1 மாணவி தீயில் கருகி பலி சிம்னி விளக்கு சரிந்து விழுந்ததில் பிளஸ் 1 மாணவி தீயில் கருகி பலி
கருங்கல், அக். 1-
புதுக்கடையை அடுத்த இனயம் புத்தன்துறையைச் சேர்ந்தவர் ஜான்சன். மீன் பிடி தொழிலாளி. இவரது மனைவி மரிய தங்கம். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜாய்ஸ் (வயது 16). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று இரவு வீட்டில் பள்ளி பாடங்களை படித்துக் கொண்டிருந்தபோது திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால் அவர் சிம்னி விளக்கை பற்றவைத்தார்.
அப்போது விளக்கில் இருந்த மண்எண்ணை ஜாய்ஸ் மீது கொட்டியது. இதில் எதிர்பாராதவிதமாக அவரது உடலில் தீப்பிடித்துக்கொண்டது. இதை கண்டதும் அவரது தாய் மரிய தங்கம் ஓடி வந்து மகளை கட்டிப்பிடித்தபடி தீயை அணைக்க முயன்றனர். இதில் அவரது உடலிலும் தீப்பற்றியது. இருவரும் உயிருக்கு போராடினர். சத்தம் கேட்டு ஓடி வந்த ஜான்சன் 2 பேரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஜாய்ஸ் பரிதாபமாக இறந்து போனார். அவரது தாயார் மரிய தங்கம் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவி மற்றும் மகளை காப்பாற்றச் சென்றதில் ஜான்சனுக்கும் கையில் தீக்காயம் இருந்தது. அதற்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Post a Comment