நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
நெல்லை, அக். 1-
நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் கடையநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 2,28,312 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக வாசு தேவநல்லூர் தொகுதியில் 1,96,968 வாக்காளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின் கலெக்டர் செல்வராஜ் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் கடந்த 5-1-2012 அன்று 21,16,014 வாக்காளர்கள் இருந்தனர். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க கடந்த 15-9-2012 வரை 9,629 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீதான பரிசீலனையில் 4003 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள 5,623 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த விண்ணப்பதாரர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
இது தவிர இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என 1,779 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இன்று முதல் வருகிற 31-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, நீக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வருகிற 6 மற்றும் 9-ந்தேதிகளில் கிராமசபைகளில் வாக்காளர் பட்டியல் வாசிக்கப்பட்டு சரி பார்க்கப்படும்.
அதில் பெயர் விடுபட்டவர்கள் தங்களது பெயரை புதிதாக சேர்க்க வேண்டும். இதற்காக வருகிற 7, 14, 21 ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்தந்த வாக்குச் சாவடிகளில் நடக்கும் இந்த முகாம்களில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம். 1-1-2013 அன்று 18 வயது பூர்த்தி அடைவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு 5-1-2013 அன்று இறுதி வாக்காளர் பட்டியில் வெளியிடப்படும். இவ்வாறு கலெக்டர் செல்வராஜ் கூறினார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, தேர்தல் பிரிவு தனி தாசில்தார் ராமச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மதிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.
Post a Comment