கேர்ள் பிரெண்டிடம் அத்துமீறி நடந்துகொண்ட இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களை நடிகர் நவ்தீப்பும் நண்பர்களும் சரமாரியாக தாக்கினர். இதுதொடர்பாக நவ்தீப் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அறிந்தும் அறியாமலும், இளவட்டம், நெஞ்சில் ஜில் ஜில், ஏகன் அஆஇஈ, சொல்லச்சொல்ல இனிக்கும் உள்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் நவ்தீப். தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார்.
ஐதராபாத் அருகே மாதாபூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நவ்தீப், அவரது நண்பர் ஜெயவர்த்தன், அவர்களது கேர்ள் பிரெண்ட்கள் உள்ளிட்டோர் சென்றனர். ஓட்டலில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சிலர் இருந்தனர்.
அவர்கள் நவ்தீப்பின் கேர்ள் பிரெண்டிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையறிந்து அவர்களை தேடினார் நவ்தீப். அதற்குள் அவர்கள் அருகே உள்ள ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்றுவிட்டனர். நவ்தீப் மற்றும் நண்பர்கள் அங்கு சென்று மாணவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நவ்தீப்பின் நண்பர் ஜெயவர்த்தன் ஒரு மாணவரின் செல்போனை பிடுங்கி தரையில் வீசி உடைத்தார். இதையடுத்து மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் சில மாணவர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே மாதாபூர் போலீசில் புகார் அளித்தனர். நவ்தீப், நண்பர்கள் மற்றும் மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
Post a Comment