தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும், பத்து கட்சி எம்.எல்.ஏக்களும் அதிமுகவுக்குத் தாவப் போவதாக ஒரு சூடான செய்தி வேகமாகப் பரவி வருகிறது. இவர்களை அதிமுகவுக்கு இழுக்கும் பணிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இவர்கள் கட்சி மாறுவார்கள் என்றும் அந்த செய்தி கூறுகிறது.
தமிழகத்தின் மூத்த அரசியல் வாதிகளில் ஒருவர் பண்ருட்டி ராமச்சந்திரன். எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதி. ஆரம்பத்தில் திமுகவில் முக்கியப் புள்ளியாக விளங்கியவர். பின்னர் எம்ஜிஆருடன் இணைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் பாமகவில் சேர்ந்து அக்கட்சியின் முதல் எம்.எல்.ஏ என்ற பெருமையைப் பெற்றார். பின்னர் விஜயகாந்த் பக்கம் சேர்ந்து தேமுதிகவில் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 6 முறை பண்ருட்டி தொகுதியிலிருந்து உறுப்பினராக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது சென்னை ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார்.
விஜயகாந்த் ரசிகர் கூட்டத்தை ஒரு அரசியல் சக்தியாக மாற்றியமைத்து, திட்டமிட்டு தெளிவாக்கியதில் பண்ருட்டியாருக்கு முக்கியப் பங்கு உண்டு. மேலும் கூட்டணி அரசியலுக்கு தேமுதிகவை திருப்பி விட்டதிலும் பண்ருட்டியாருக்கு முக்கியப் பங்கு உண்டு. இவரது ஆலோசனையின் பேரில்தான் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவுக்கு விஜயகாந்த் வந்தார் என்று கூறப்படுகிறது.
ஆனால் கூட்டணியை அமைத்த பின்னர் முதல்வர் ஜெயலலிதா சீட் கொடுப்பதில் திடீரென ஜகா வாங்கியதால் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்தார் விஜயகாந்த். இதையடுத்து தனது கோபத்தை பண்ருட்டியார் மீது அவர் காட்டியதாகவும் அப்போது செய்திகள் வெளியாகின. இதனால் மனம் உடைந்தார் பண்ருட்டியார் என்றும் கூறப்பட்டது. மேலும் பண்ருட்டியார் கேட்ட பண்ருட்டியைத் தராமல், ஆலந்தூர் தொகுதியை விஜயகாந்த் கொடுத்ததால் மேலும் அப்செட் ஆனாராம் பண்ருட்டி ராமச்சந்திரன்.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலி்ல் ஜெயலலிதா தேமுதிகவை முற்றிலும் புறக்கணித்து புறம் தள்ளி விட்டதால் விஜயகாந்த் மேலும் அப்செட் ஆகி, பண்ருட்டியாரை பிரசாரத்திற்குக் கூட அழைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் பண்ருட்டி ராமச்சந்திரனை உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் எங்குமே காண முடியவில்லை. மேலும் கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் கூட அவரைக் காண முடியவில்லை.
இதையடுத்தே பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவுக்கு இழுக்கும் வேலைகள் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட ஒரு குழுவே இதற்காக நியமிக்கப்பட்டு அதற்கான வேலையில் இறங்கியதாம். பண்ருட்டியாரை மட்டும் அல்லாமல் சில எம்.எல்.ஏக்களையும் இழுக்க இக்குழு வேலையில் ஈடுபட்டதாம். இதன் விளைவாக தற்போது பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையி்ல 10 எம்.எல்.ஏக்களை வெற்றிகரமாக மாற்றி விட்டதாக பரபரப்புத் தகவல்கள் கூறுகின்றன. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
மொத்தம் 29 எம்.எல்.ஏக்கள் தேமுதிகவுக்கு உள்ளனர். இவர்களில் 10 பேர் அணி மாறி வருவதால் கட்சி தாவல் தடை சட்டம் பாயாது என்று கூறப்படுகிறது. ஒருவேளை இது நடந்தால் சட்டசபையில் தேமுதிக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழந்து விடும். திமுக எதிர்க்கட்சியாகி விடும். எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் உருவெடுப்பார்.
இது குறித்து தேமுதிக தலைமைக் கழக நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது , திமுக, அதிமுக ஆகி்ய கட்சிகளுக்கு மாற்றுக் கட்சி தேமுதிக தான். இந்த தேர்தலில் நடுநிலையான வாக்காளர்கள் ஓட்டு எல்லாம் தேமுதிகவிற்கே சென்றது. இதை எல்லாம் சகிக்க முடியாத சில அரசியல் சக்திகள் வதந்திகளை கண் காது வைத்து கதை கட்டி விடுகின்றது. பண்ருட்டியார் முதல் எல்லா சட்ட மன்ற உறுப்பினர்களும் அரசியலுக்கு அப்பாற்பட்டு கேப்டன் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்துள்ளனர். தேமுதிக ஒரு எக்கு கோட்டை. இங்கு சிறு ஓட்டைக்கும் இடம் இல்லை. இது போன்ற சலசலப்புக்கு எல்லாம் தேமுதிக அஞ்சாது என்கின்றனர்.
இதற்கிடையே பண்ருட்டியாரின் அதிருப்திக்கு மேலும் ஒரு காரணத்தைக் கூறுகின்றனர். அதாவது தனது மகனுக்கு தேமுதிகவில் முக்கிய்ப பொறுப்பு தர வேண்டும் என்று கேட்டாராம் ராமச்சந்திரன். ஆனால் அதை விஜயகாந்த் நிராகரித்து விட்டாராம். இதனால்தான் அவர் கடும் அதிருப்தி அடைந்ததாக அந்தத் தகவல் கூறுகிறது.
அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் - இது அதிமுகவுடன் கூட்டணி அமையுமா என்று சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் சொன்ன பதில்.
Post a Comment