மரண தண்டனை விதிப்பது காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது, ஜனநாயக விரோதமானது, பொறுப்பற்றது என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த இந்தியாவில் தூக்குத் தண்டனை ஒழிப்பு என்ற பெயரிலான 2 நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும்போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நீதிபதி ஏ.கே.கங்குலி பேசுகையில், நமது சட்டத்தில் தூக்குத் தண்டனை இடம் தரப்பட்டுள்ளது. ஆனால் ஒருவருக்குத் தூக்குத் தண்டனை தருவது என்பது காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது, ஜனநாயக விரோதமானது, பொறுப்பற்றது என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.
வெற்று அனுமாங்களால் ஒருவருக்கு நமது அரசியல் சட்டம் அளித்துள்ள வாழ்வதற்கான உத்தரவாதத்தை இது கேள்விக்குறியாக்கி விடக் கூடாது.
மிக மிக அரிதான சம்பவங்களில் மட்டுமே தூக்குத் தண்டனை என்ற சொல் மிகவும் பலவீனமாக உள்ளது. எது அரிய செயல் என்பதை தீர்மானிப்பது சுலபமல்ல. ஒவ்வொரு நீதிபதியின் மன நிலையைப் பொறுத்து, அவர் முடிவெடுப்பதைப் பொறுத்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. அரசியல் சாசனச் சட்டம் நிர்ணயித்துள்ள, வழங்கியுள்ள அனைத்து அம்சங்களையும் அப்போது நீதிபதிகள் கருத்தில் கொண்டாக வேண்டும்.
ஒருவரை மரணக் குழியில் தள்ளுவது எனபது நமது சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு தண்டனைதான் என்றாலும், அது காட்டுமிராண்டித்தனமானது. ஒருவரின் வாழும் உரிமையை நிராகரிப்பதாக அது அமையும்.
எந்தவித சந்தேகமும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட நிலை இதுவரை உருவாகவில்லை.
எனவே ஒரு நீதிபதி யாருக்காவது மரண தண்டனை கொடுக்க தீர்மானித்தால், முதலில் அதற்கான சூழல்களை மிக மிக கவனமாக ஆராய்வது அவசியம். அந்த குற்றவாளி மீண்டும் திருந்த வாய்ப்பே இல்லை என்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கோர்ட்களில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் மரண தண்டனை குறித்த பரிசீலனைகளைச் செய்யலாம் என்றார் கங்குலி.
இந்தியாவில் தூக்குத் தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வரும் நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், தூக்குத் தண்டனைக்கு எதிராக வலுவாக குரல் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூக்குத் தண்டனைக்கு எதிரான போராட்டங்களுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
Post a Comment