அணு ஆயுதம் ஏந்தி கண்டம் விட்டு கண்டம் தாவும் திறன் கொண்ட அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக செலுத்தியதை ஜீரணிக்க முடியாமல் சீனா தவித்து வருகிறது.
இந்த ஏவுகணை குறித்து சீன அரசு அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்காவிட்டாலும், அந் நாட்டின் அரசு பின்பலம் கொண்ட பத்திரிக்கைகள், இந்த ஏவுகணை சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக அவை குற்றம் சாட்டியுள்ளன.
இந் நிலையில் சீன ராணுவத்தின் மிலிட்டரி சயின்ஸஸ் பிரிவின் ஆராய்ச்சியாளரான டியு வென்லாங், அக்னி ஏவுகணை இந்தியா சொல்வது போல 5,000 கி.மீ. தூரம் மட்டும் பாயக்கூடியதல்ல. அது 8,000 கி.மீ. தூரத்தை கடந்து செல்லத் தக்கது என்று கூறியுள்ளார்.
மற்ற நாடுகளிடையே கலக்கத்தை உருவாக்குவதைத் தவிர்க்க இந்த ஏவுகணையின் உண்மையான திறனை இந்திய அரசு மறைத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
சீன ராணுவ பல்கலைக்கழகத்தின் பேராசியரான ஷாக் ஷாவோஷாங் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், அக்னி 5 ஏவுகணையை இந்தியா மேலும் பலம் வாய்ந்த ஆயுதமாக வலுப்படுத்தக் கூடும் என்று கூறியுள்ளார்.
இந்த ஏவுகணை மூலம் இந்தியா, சீனாவுக்கு இணையான இடத்தைப் பிடித்துவிட்டதாக ஜெனீவா சர்வதேச பாதுகாப்பு மையத்தின் தலைவரான கிராம் ஹெர்ட் தெரிவித்துள்ளார்.
Post a Comment