News Update :
Home » » ஜெ. சவாலை ஏற்றார் விஜயகாந்த்..களத்தில் குதித்தது தேமுதிக

ஜெ. சவாலை ஏற்றார் விஜயகாந்த்..களத்தில் குதித்தது தேமுதிக

Penulis : karthik on Monday, 20 February 2012 | 22:51

 
 
 
திராணி இருந்தால் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுங்கள் பார்ப்போம் என்று கூறிய முதல்வர் ஜெயலலிதாவின் சவாலை ஏற்று சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இருப்பினும் திமுகவின் ஆதரவை நாடுமா என்பது தெரியவில்லை.
 
தேமுதிக சார்பில் சங்கரன்கோவிலில் முத்துக்குமார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சங்கரன்கோவிலில் மார்ச் 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு பல வாரங்களுக்கு முன்பே அதிமுக தனது வேட்பாளராக என்ஜீனியர் முத்துச்செல்வியை அறிவித்தது.
 
பின்னர் திமுக தனது வேட்பாளராக ஜவகர் சூரியகுமாரை அறிவித்தது. அதேபோல மதிமுகவும் தனது வேட்பாளராக டாக்டர் சதன்திருமலைக்குமாரை அறிவித்தது.
 
இந்த நிலையில் தேமுதிகவின் நிலை தெரியாமல் இருந்து வந்தது. நாளை கூடும் அக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்த நிலையில் இன்றே தனது கட்சி வேட்பாளரை அறிவித்து விட்டார் விஜயகாந்த்.
 
தேமுதிக சார்பில் முத்துக்குமார் போட்டியிடுவார் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
நடைபெற இருக்கின்ற சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் திருநெல்வேலி மேற்கு மாவட்ட கழகத்தின் துணை செயலாளர் மு. முத்துக்குமார், பி.இ,எம்பிஏ வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
 
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் பி.இ. பயின்றவர். எம்பிஏ பட்டப் படிப்பு அழகப்பா பல்கலை கழகத்தின் தொலை தூர கல்வி மூலம் முடித்துள்ளார். கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டவர். இவர் சங்கரன்கோவில் நகரத்தில் வசிக்கின்றார்.
 
கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், கழக ஆதரவு அணிகளை சேர்ந்தவர்களும் அயராது தேர்தல் பணியாற்றி வெற்றி தேடி தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். சங்கரன்கோவில் தொகுதியை சேர்ந்த வாக்காளர் பெருமக்களும், பொதுமக்களும் தங்கள் மேலான ஆதரவை தர வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
 
இந்தப் போட்டியைத் தொடர்ந்து சங்கரன்கோவிலில் தற்போது நான்குமுனை போட்டி உருவாகியுள்ளது. அதேசமயம், பொது வேட்பாளரை நிறுத்தும் வாய்ப்பு மங்கியுள்ளது. இருப்பினும் கடைசி நேரத்தில் தேமுதிக, திமுக இடையே உடன்பாடு ஏற்பட்டால் இவர்களில் யாராவது ஒருவர் விலகிடலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
 
நாளை சென்னையில் நடைபெறவுள்ள தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில் விஜயகாந்த் எப்படிப் பேசப் போகிறார், என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger