கேரளத்தைச் சேர்ந்த மலையாளக் கட்சிகள், அரசியல்தலைவர்கள் ஆகியோர் கடும் எதிர்ப்பு மற்றும் நெருக்குதலைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தான் கூறிய கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வாபஸ் பெற்றுள்ளார். தேவையில்லாமல் தான் பேசி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கேரளாவைச் சேர்ந்த அமைச்சர்களின் நெருக்குதலைத் தொடர்ந்தே ப.சிதம்பரம் இந்த வாபஸ் முடிவுக்குத் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையில் 17-12-2011 அன்று நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் நான் பேசினேன். எனது பேச்சு சில பத்திரிகைகளில் முழுமையாக வெளியாகி உள்ளன. எனது முழுமையான பேச்சை தமிழக-கேரள மக்கள் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஒவ்வொருவரும், கவுரவம், கட்டுப்பாடு மற்றும் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்று எனது பேச்சில் கேட்டுக் கொண்டேன். முல்லைப் பெரியாறு அணை குறித்த அச்சம் நியாயமானது அல்ல. அதே சமயம் அணையின் பாதுகாப்பு குறித்த இரு மாநில மக்களின் அச்சத்தை போக்குவதும் மத்திய அரசின் கடமை என்றும் குறிப்பிட்டேன்.
அணையின் பாதுகாப்பு என்பது கேரளாவுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கும் கவலை அளிக்ககூடிய விஷயம்தான். முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
முல்லைப்பெரியாறு விவகாரம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட் 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. அந்த குழு விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. அதுவரையில் அனைவரும் பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மற்ற பேச்சாளர்கள் சுட்டிக் காட்டியது போல நானும் அங்கு (கேரளாவில்) இடைத்தேர்தல் நடக்க இருப்பதால், இந்த பிரச்சினை பெரிதாக்கப்படுவதாக கூறினேன். அந்த கருத்தை திரும்ப பெறுகிறேன்.
அப்படி நான் கூறியது தேவையற்ற கருத்து. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது. இரண்டு மாநில மக்களின் ஒத்துழைப்பு, மற்றும் சகோதரத்துவம் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ப.சிதம்பரம்.
சென்னை காமராஜர் அரங்கில் நடந்த முல்லைப் பெரியாறு, கூடங்குளம் பிரச்சினை ஒரு விளக்கம் என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், பிரவோம் இடைத் தேர்தலை மனதில் கொண்டே கேரள கட்சிகள் முல்லைப் பெரியாறு பிரச்சினையை தீவிரப்படுத்தியிருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இதில் கலந்து கொண்டு பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.
சட்ட நிபுணரான ப.சிதம்பரம் தனது பேச்சின்போது தமிழகத்திற்கு ஆதரவாகவே உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் என்றும் அடித்துக் கூறினார். இதையெல்லாம் பொறுக்க முடியாமல் கேரள லாபியிலிருந்து பெரும் நெருக்கடி கிளம்பவே தனது பேச்சை வாபஸ் பெறுவதாக ப.சிதம்பரம் அறிவிக்க நேரிட்டுள்ளது.
கேரள அரசியல்வாதிகள் தங்களது இஷ்டத்திற்குப் பேசி வரும் நிலையில், ப.சிதம்பரத்திற்கு மட்டும் அந்த உரிமை கொடுக்கப்படாமல் நெருக்குதலுக்குள்ளாக்கியிருப்பது ஆச்சரியமாக உள்ளது..
Post a Comment