News Update :
Home » » கேரளத்துக்கு தண்ணீர்...தமிழகத்துக்கு 'கண்ணீர்': பண்ருட்டி ராமச்சந்திரன்

கேரளத்துக்கு தண்ணீர்...தமிழகத்துக்கு 'கண்ணீர்': பண்ருட்டி ராமச்சந்திரன்

Penulis : karthik on Sunday, 18 December 2011 | 02:19

 
 
முல்லைப் பெரியாறு பிரச்சனையை 1979ம் ஆண்டு முதலே தமிழக அரசு அரசியல் கோணத்தில் அணுகவில்லை. நிபுணர்கள் கூறியதன் அடிப்படையிலேயே அணுகியது. ஆனால், கேரள அரசு அரசியல் அடிப்படையில் அணுகி அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது என்று தேமுதிக அவைத் தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
 
முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக, சட்டசபையில் நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது அவர் பேசுகையில், இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானத்தை தேமுதிக முழு மனதுடன் வரவேற்கிறது. இதில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும்.
 
முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசு பலப்படுத்திய பிறகும், அணையின் நீர்மட்டத்தை 152 அடியில் இருந்து 136 அடியாக கேரள அரசு குறைத்தது. அதன்பின்னர், அணையின் நீர்மட்டத்தை உயர்த்த மறுத்து வருகிறது.
 
அணையைப் பலப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்று சொன்னார்களோ அனைத்தையும் தமிழக அரசு செய்தது. அணையைப் பலப்படுத்திய பிறகு, நீர்மட்டத்தை உயர்த்துவதை கேரள அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
 
ஒரு வீட்டில் வாடகைக்கு குடிவருபவர் கூட, அந்த வீட்டில் சிலவற்றை மாற்றியமைத்து தரும்படி வீட்டு உரிமையாளரிடம் கூறுவார்கள். பின்னர், வீட்டில் எல்லாம் சரிசெய்யப்பட்ட பிறகு, வீடு வேண்டாம் என்றால் வீட்டு உரிமையாளர் சும்மாவா விடுவார்?.
 
முல்லைப் பெரியாறு அணை குறித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பிறகு, 2006ம் ஆண்டு நிபுணர் குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் நியமித்து ஆராய்ந்தது. அந்த நிபுணர் குழுவும் அணை பலமாக உள்ளது என்று அறிக்கை அளித்தது. அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்றும், மேலும் மேம்பாட்டு பணிகள் செய்து 152 அடியாக உயர்த்தலாம் என்றும் கூறியது.
 
இதை, உச்ச நீதிமன்றம், மத்திய அரசு, தமிழக அரசு ஏற்றுக் கொண்டன. ஆனால், கேரள அரசோ மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு நாங்கள்தான் பாதுகாப்பு என்று சட்டம் இயற்றியது. உச்ச நீதிமன்ற மீறி கேரளா நயவஞ்சகமாக செயல்படுகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
 
முல்லைப் பெரியாறு பிரச்சனையை 1979ம் ஆண்டு முதலே தமிழக அரசு அரசியல் கோணத்தில் அணுகவில்லை. நிபுணர்கள் கூறியதன் அடிப்படையிலேயே அணுகியது. ஆனால், கேரள அரசு அரசியல் அடிப்படையில் அணுகியது. அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியது.
 
இப்போதுகூட இந்தச் சட்டத்தை எதிர்க்கும் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபிறகு அதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?.
 
தமிழகத்துக்கு தண்ணீர், கேரளத்துக்குப் பாதுகாப்பு என்ற வாதத்தை அந்த மாநில அரசு கூறிவருகிறது. கேரள மக்களின் பாதுகாப்பில் நமக்கும் அக்கறை உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் முழுக் கொள்ளவு 10.57 டி.எம்.சி. ஆகும். ஆனால், இப்போது 136 அடி வரை நீரைத் தேக்குவதால் 6 டி.எம்.சி. நீர் வரை மட்டுமே சேமிக்கப்படுகிறது.
 
அங்கு புதிய அணை கட்டினால், கேரளத்துக்கு தண்ணீரும் தமிழகத்துக்கு கண்ணீரும் தான் கிடைக்கும்.
 
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசை முதல்வர் வலியுறுத்தி வருகிறார். ஆனால், கேரள அரசு அனுமதித்தால்தான் மத்திய பாதுகாப்பு படையை அனுப்ப முடியும் என்று பிரதமர் கூறியதாக செய்தி வருகிறது. அந்த மாநில அரசு பாதுகாப்பு வழங்காத காரணத்தால்தான் மத்திய பாதுகாப்பு கோரப்படுகிறது.
 
எனவே, இந்த விஷயத்தில் அரசுக்கு யோசனை ஒன்றை கூற விரும்புகிறேன். இன்றைய சூழலில் முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்கவும், இயக்கவும், நிர்வகிக்கும் பொறுப்பையும், அணையை சுற்றிய பகுதியை பாதுகாக்கும் பொறுப்பையும் மத்திய அரசு எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
இதற்காக மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும். இதை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மேலும், அங்கு அமைதியை நிலைநாட்ட ராணுவத்தை அனுப்பவும் தமிழக அரசு மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger