Subject: விஜயகாந்த் பெயரில் வசூல் வேட்டை!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரில் பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியினர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர். தேமுதிக தென் சென்னை மாவட்ட செயலாளர் வி.என்.ராஜன், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் இன்று ஒரு புகார் மனு கொடுத்தார். பின்னர், வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா பெயரை பயன்படுத்தி ஒரு கும்பல் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினோம். அதில், அடையார் இந்திரா நகரில் உள்ள எஸ்.ஆர்.ராமசாமி நாயக்கர் இல்லம் என்ற பெயரில் புதுமனை புகுவிழா நடப்பதாகவும் இதில், விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா, எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்து கொள்வதாகவும் அச்சடித்து தமிழகம் முழுவதும் கொடுத்துள்ளனர்.
அழகர் சாமி என்பவர் இதுபோல் செய்து வசூல் வேட்டை நடத்தி வருகிறார். இந்த விழாவில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. மேலும், அழகர்சாமி எங்கள் கட்சியின் உறுப்பினரே இல்லை. எனவே, விஜயகாந்த் பெயரை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டு வரும் அழகர்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு ராஜன் கூறினார். கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Post a Comment