காங்கிரஸ் கட்சியின் வருங்காலத் தலைவரான ராகுல்காந்தி வன்முறையை தூண்டும் வகையிலும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசிவருவாக புகார் எழுந்துள்ளது.
நவம்பர் 14 –ம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி ஒன்றில் அம்மாநில மக்களை பிச்சைக்காரர்கள் என்று ராகுல்காந்தி சித்தரித்துள்ளது வன்முறையை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் ஒளி, இளைய தலைமுறையினரை காக்க வந்த ரட்சகன் என்றென்றாம் ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியினர் புகழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர் கூறும் அளவிற்கு தலைவருக்குரிய தகுதியோடு ராகுல் காந்தி நடந்து கொள்கிறாரா என்பது ஐயத்திற்குரியதாக இருக்கிறது. ஏனென்றால் ராகுல்காந்தியின் சமீபத்திய பேச்சுக்கள் அனைத்துமே சர்ச்சையில் சிக்கி வருகின்றன.
கையேந்துவது ஏன்?
உத்தரபிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி நவம்பர் 14 –ம் தேதி அங்கு நடைபெற்ற மிகப்பெரிய பேரணி ஒன்றில் பேசியுள்ளார்.
அப்போது, உத்தரபிரதேச மக்கள் மிகச்சிறந்த உழைப்பாளிகள். அவர்கள் ஏன் பிழைப்பிற்காக பிற மாநிலங்களை நோக்கிச் செல்லவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். வேலைக்காக மகாராஷ்டிரா மாநிலத்தவரிடம் ஏன் கையேந்த வேண்டும் என்றும் உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இந்திய சட்டப்பிரிவு 19 –ல் கூறப்பட்டுள்ளதுபடி எந்த ஒரு இந்திய பிரஜையும் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் பணி புரியலாம். ஆனால் ராகுல் காந்தியின் பேச்சினால் மகாராஷ்டிராவில் பணிபுரியும் உத்தரபிரதேச மக்கள் பாதிக்கப்படுவார்கள். அங்கு வன்முறை நிகழ வாய்ப்பு ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் விமர்ச்சித்துள்ளனர்.
மக்கள் பிச்சைக்காரர்களா?
மக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் நிறுவனத்திலோ, பொதுக்கூட்டத்திலோ தனிநபர் ஒருவர் பேசக்கூடாது என்று அரசியல் சட்டப்பிரிவு 21-ல் கூறப்பட்டுள்ளது. ஆனால் இளம் அரசியல் தலைவர் என கூறப்படும் ராகுல் காந்தி மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் உத்தரபிரதேச மக்களை பிச்சைக்காரர்கள் என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் பேசி அவர்களின் மனதை புண் படுத்தியுள்ளார். இது வன்முறையை தூண்டும் வகையிலான பேச்சாகும்.
வன்முறையா தெரியலையே?
ராகுல் காந்தியில் பேச்சுகள் ஏற்கனவே தேசிய அளவில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. 2012 –ம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்சித், இது ஒன்றும் வன்முறையை தூண்டும் பேச்சு அல்ல, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணர்ச்சி மயமாக கூறப்பட்ட கருத்துதான் என்று கூறியுள்ளார்.
Post a Comment