செல்போனில் அறிமுகமான வாலிபரிடம் தனக்கு 22 வயது என்று கூறி காதல் வளர்த்தார் 35 வயது பெண். ஆனால் அவர் தனது 16 வயது மகனுடன் நேரில் வந்து நின்றதால், அயய்யோ என்று பயந்து திருமணத்துக்கு மறுக்கவே, அந்த பெண் அவரை அடித்து உதைத்துள்ளார். இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சூளக்கலைச் சேர்ந்தவர் விஜயராகவன் (27). அவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். கடந்த ஆண்டு ஒரு பத்திரிக்கையில் 'மணமகள் தேவை' என்று விளம்பரம் கொடுத்தார்.
இந்த விளம்பரம் வெளியான ஒரு வாரத்துக்கு பிறகு, பெண் ஒருவர் விஜயராகவனை செல்போனில் அழைத்து பேசினார். அப்போது அந்த பெண் தனக்கு 22வயது என்று கூறியுள்ளார். அதன்பிறகு 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி பழக்கம் அதிகமானது.
தொடர்ந்து பேசி வந்ததில் அந்த பெண்ணின் பெயர் ஜெயா என்பதும், இந்தி ஆசிரியையாக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. ஜெயாவை காதலிக்க ஆரம்பித்த விஜயராகவன், அவரை நேரில் பார்க்க ஆசைப்படுவதாக பலமுறை கூறினார். ஆனால் தனக்கு பள்ளியில் அதிக பணிகள் இருப்பதாக கூறி நேரில் சந்திப்பதை ஜெயா தவிர்த்து வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன் இரவு நீண்டநேரம் செல்போனில் பேசிய 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இதற்கு விஜயராகவனின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.
எனவே தாராபுரத்தில் உள்ள கோவில் ஒன்றில் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 14ம் தேதி காலையில் தாராபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் சந்திக்க திட்டமிட்டனர். செல்போனில் மட்டுமே பேசி வந்த காதலியை நேரில் பார்க்கும் மகிழ்ச்சியில் விஜயராகவன் கோவில் அருகே காத்திருந்தார்.
அப்போது ஆள்நடமாட்டம் குறைந்த அந்த பகுதிக்கு 16 வயது சிறுவன் உடன் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார். விஜயராகவனிடம் தன்னை செல்போனில் பேசிய காதலி ஜெயா என்றும் தன்னுடன் வந்திருப்பது தன் மகன் அருண் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த விஜயராகவன் தன்னிடம் 22 வயது பெண் என்றும், திருமணமாகவில்லை என்றும் கூறி ஏமாற்றியது குறித்து கேட்டார். மேலும் ஜெயாவை திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அதில் ஆத்திரமடைந்த ஜெயா தனது மகன் அருண் மற்றும் சிலருடன் சேர்ந்து விஜயராகவனை அடித்து உதைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். படுகாயமடைந்த விஜயராகவனை அப்பகுதியினர் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையி்ல் சேர்த்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த தாராபுரம் போலீசார், ஜெயாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அருண் உட்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
யார் இந்த ஜெயா?
கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் பாபு என்பவரை திருமணம் செய்த ஜெயா மும்பையி்ல் குடியேறியுள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு பாபு இறந்துவிட்டதால் மகன் அருண் உடன் தாராபுரத்துக்கு வந்து தங்கினார்.
ஏற்கனவே ஜெயா மீது வீடு புகுந்து திருடியது உட்பட 2 திருட்டு வழக்குகள் உள்ளது என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Post a Comment