2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கலைஞர் டிவியின் சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு (Enforcement Directorate) முடிவு செய்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரத்தை முறைகேடாகப் பெற்ற டி.பி. ரியாலிட்டி உரிமையாளர் ஷாகித் ஹுசேன் பல்வாவின் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் (இப்போது இதன் பெயர் Etisalat DB) தனது துணை நிறுவனமான குசேகாவ்ன் புரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் மற்றும் சினியுக் பிலிம்ஸ் ஆகியவை மூலமாக கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடியை வழங்கியது.
முதலில் இந்தப் பணம் டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திலிருந்து குசேகாவ்ன் புரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனத்துக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஷாகித் ஹுசேன் பல்வாவின் சகோததர் ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோர்.
இந்தப் பணம் அங்கிருந்து படத் தயாரிப்பாளர் கரீம் மொரானியின் சினியுக் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இந்தப் பணம் கலைஞர் டிவிக்கு வந்து சேர்ந்தது.
கடந்த 2008-2010ம் ஆண்டுகளில் 33 தவணைகளில் இந்தப் பணம் கலைஞர் டிவிக்கு வந்து சேர்ந்தது.
ஆனால், இதை சினியுக் தங்களுக்கு கடனாகவே வழங்கியதாகவும், அதை வட்டியோடு சேர்த்து ரூ. 214 கோடியாகத் திருப்பித் தந்துவிட்டதாக கலைஞர் டிவி கூறுவதை சிபிஐ ஏற்கவில்லை. 2ஜி விவகாரம் வெடித்தவுடன், பிரச்சனையிலிருந்து தப்புவதற்காகத் தான் இதை கலைஞர் டிவி கடன் போல காட்டுவதாக சிபிஐ கூறுகிறது. இந்த விவகாரத்தில் தான் திமுக எம்பி கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் (Prevention of Money Laundering Act-PMLA) இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க களமிறங்கியது அமலாக்கப் பிரிவு.
முதல்கட்டமாக கலைஞர் டிவிக்கு பணத்தைத் தந்த ஷாகித் ஹுசேன் பல்வாவுக்கு சொந்தமான டைனமிக்ஸ் ரியாலிட்டி உள்ளிட்ட 4 நிறுவனங்களின் ரூ. 233.55 கோடி சொத்துக்களை முடக்க கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமலாக்கப் பிரிவு உத்தரவு பிறப்பித்தது.
இந் நிலையில் இப்போது கலைஞர் டிவி, குசேகாவ்ன் புரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் மற்றும் சினியுக் ஆகிய நிறுவனங்களின் ரூ. 13.5 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு அடுத்த உத்தரவைப் பிறப்பிக்கவுள்ளது.
இந்த உத்தரவின்படி 3 நிறுவனங்களின் அசையும்- அசையா சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் ஆகியவை முடக்கப்படவுள்ளன. சட்டவிரோத பண பரிமாற்ற சட்டப் பிரிவு 4ன் கீழ் இந்த நடவடிக்கையை அமலாக்கப் பிரிவு எடுக்கவுள்ளது.
Post a Comment