வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள மன நலம் பாதித்த பெண்ணை முன்னதாக விடுதலை செய்யும் வழக்கில் இரண்டு வார காலத்திற்கு பதிலளிக்க கோரி தமிழக அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சிறைக்கைதிகள் உரிமை மையத்தின் இயக்குனர் பி.புகழேந்தி தாக்கல் செய்த ஆட்கொணர்வு (ஹேபியஸ் கார்பஸ்) மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
புகழேந்தி தாக்கல் செய்த மனுவின் விபரம்:
கடந்த செப்டம்பர் மாதம் வேலூர் சிறையில் உள்ள நளினியை பார்க்க சென்றிருந்தேன். அப்போது அங்கு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பக்கா என்ற விஜயா (52) என்ற பெண்ணைப் பற்றி தெரியவந்தது. அந்தப்பெண்ணும், அவரது கணவர் சுப்பிரமணியும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 10.4.90 அன்று முதல் சிறையில் இருக்கின்றனர். கடந்த 21 ஆண்டுகளாக அவர்கள் சிறையில் உள்ளதால் விஜயாவின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. யாரிடமும் அவரால் பேச முடியவில்லை. அவரது கணவருக்கும் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு உறவினர்களின் உதவியும் இல்லை.
ஆஜர்படுத்த வேண்டும்
எனவே விஜயாவை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று அரசுக்கு மனு கொடுத்தேன். விஜயாவுக்கு முன்கூட்டியே விடுதலை அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படுவதாக போலீஸ் தரப்பில் இருந்து அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. முன்கூட்டியே விடுதலை ஆவதற்கான தகுதியை விஜயா பெற்று 19 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. எனவே விஜயாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அரசுக்கு நோட்டீஸ்
இந்த மனு நீதிபதிகள் சி.நாகப்பன், டி.சுதந்திரம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்த்து. மனுவை விசாரித்த நீதிபதிகள் 2 வார காலத்திற்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
Post a Comment