ஆவின் பால் விலை இன்று (சனிக்கிழமை) முதல் உயர்த்தப்படுகிறது. ஆனால், விலை உயர்வு எவ்வளவு? என்பது தெரியாமல் அதிகாரிகள், ஏஜெண்டுகள் மத்தியில் குழப்பம் நிலவியது.
ஆவின் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதால், ஆவின் பால் விலையை அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆவின் நிறுவனம் தற்போது அதிக கொழுப்பு சத்து மிகுந்த பால், கொழுப்பு சத்து குறைந்த பால் என நீலம், பச்சை, ஆரஞ்சு, மெஜந்தா என 4 வகையான நிறம் கொண்ட பாக்கெட்டுகளில் பாலை தரம் பிரித்து விற்பனை செய்து வருகிறது.
அதன்படி 3 சதவீதம் கொழுப்பு நிறைந்த சமன்படுத்திய பால் (நீலநிறம்) அட்டைதாரர்களுக்கு ஒரு லிட்டர் ரூ. 17.75-ல் இருந்து ரூ.24 ஆக உயர்த்தப்பட்டது. சில்லறை விற்பனை கடைகளில் இந்த வகை பால் லிட்டருக்கு ரூ.27.25-க்கு விற்பனையாகி வருகிறது.
4.5 சதவீத கொழுப்பு சத்து நிறைந்த பச்சை நிற (லிட்டர்) பாக்கெட் ரூ.22-லிருந்து ரூ.28.25 ஆக உயருகிறது. அதிக கொழுப்பு சத்து நிறைந்த ஆரஞ்சு நிற பாக்கெட் ரூ.24-லிருந்து ரூ.30.25 ஆக உயர்ந்தது. இரு முறை சமன்படுத்திய 1.5 கொழுப்பு சத்து நிறைந்த மெஜந்தா நிற பாக்கெட் ரூ.18.50-லிருந்து ரூ.24.75 ஆக உயர்ந்தது.
சில்லறை கடைகளில் பச்சை நிற பாக்கெட் (லிட்டர்) ரூ.31 ஆகவும், 1/2 லிட்டர் ரூ.15.50 ஆகவும், டேங்கர் பால் ரூ.24-ல் இருந்து ரூ.31-க்கும் இன்று (சனிக்கிழமை) முதல் விற்பனை செய்யப்படுவதாக பால் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
பால் விலையுடன் அதனை சார்ந்த பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது. வெண்ணெய் ஒரு கிலோ ரூ.100-லிருந்து ரூ.150 ஆக உயர்ந்தது. நெய் 200 கிராம் ரூ.55-லிருந்து ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் ஆவின் பால் பொருட்களான பால்கோவா, குலோப்ஜாமூன், மைசூர்பாகு, ஐஸ்கிரீம், நறுமண பால் வகைகள் போன்றவற்றின் விலையும் உயர்ந்து உள்ளது.
ஆனால், பால் விலை உயர்வு குறித்து ஆவின் நிர்வாகம் நேற்று இரவு வரை எந்த அறிவிப்பும் செய்யவில்லை. இதனால், அதிகாரிகள், ஏஜெண்டுகள் மத்தியில் குழப்பம் நிலவியது. குழப்பத்திற்கு மத்தியிலேயே பால் விலை இன்று (சனிக்கிழமை) உயர்த்தப்படுகிறது.
கடந்த 1.12.2009-க்கு பிறகு தற்போது தான் பால் மற்றும் பால் தயாரிப்பு பொருட்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment