சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி (20) என்ற இளம்பெண் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில் தனது தாயார் மீது பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார். தன்னை சினிமாவில் நடிக்க வைக்க தனது தாயார் வற்புறுத்துகிறார் என்றும், தனக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லை என்றும், தனது தாயார் வற்புறுத்தி தொல்லை கொடுக்கிறார் என்றும், தனது தாயாரை வரவழைத்து இது தொடர்பாக உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டு உள்ளார். பிரியதர்ஷினியின் தாயாரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வரவழைத்து, பிரியதர்ஷினி முன்னிலையில் கவுன்சிலிங் முறையில் பெண் போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் ஒருவர் இது தொடர்பாக விசாரணை நடத்துவார் என்று கமிஷனர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இது பற்றி பிரியதர்ஷினியிடம் கேட்ட போது, நான் மாட்டுத்தாவணி படத்தில் மீத்தா என்ற பெயரில் கதாநாயகி வேடத்தில் நடித்துள்ளேன்.
அந்த படம் இன்னும் வெளிவரவில்லை, போலீசார் விசாரணையை முடித்தபிறகுதான் இதுபற்றி நான் பேசமுடியும், இப்போதைக்கு அது பற்றி நான் எதுவும் பேசமுடியாது என்று சொல்லிவிட்டார். இவர் மவுனமான நேரம் படத்திலும் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment