ஆபாச எஸ்.எம்.எஸ், மற்றும் பேச்சு மூலம் பல பெண்களுக்கு தொல்லை கொடுத்து வந்த செங்கல்பட்டை சேர்ந்த வாலிபரை, ஒரு நர்ஸ் மூலம் போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருமலைவையாவூர் பகுதியை சேர்ந்தவர் அம்பிகா. தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக இவரது மொபைல்போனுக்கு, குறிப்பிட்ட நம்பரில் இருந்து ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் வந்தன.
மேலும் நள்ளிரவில் அதே நம்பரில் இருந்து பேசிய நபர், ஆபாசமாக பேசி, அம்பிகாவுக்கு தொல்லை கொடுத்தார். இந்த தொல்லை தொடரவே, மன உளைச்சல் தாங்க முடியாத அம்பிகா இதுகுறித்து, வடக்கு மண்டல ஐ.ஜி. சைலேந்திரபாபுவிடம் புகார் செய்தார்.
ஐ.ஜி உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன், மறைமலைநகர் போலீசார் விசாரித்தனர். இதில் செங்கல்பட்டு தனியார் கார் கம்பெனியில் வேலை செய்யும் அந்தோணி பெனட்டிக் (21) என்பவர் தான், அம்பிகாவின் மொபைல் போனுக்கு அழைத்து பேசி தொல்லை கொடுத்தார் என தெரிந்தது.
அந்தோணியிடம் நடத்திய விசாரணையில், அவர் அம்பிகா மட்டுமின்றி பல பெண்களுக்கும் இதுபோல செக்ஸ் தொல்லை கொடுத்தது தெரிந்தது. பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிந்த போலீசார், அந்தோணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
Post a Comment