மும்பை: பாலிவுட்டின் சாதனை நடிகர் அமிதாப் பச்சனுக்கு இன்று 69 வயது பிறக்கிறது.
'பாலிவுட்டின் பேரரசன்' என்று வர்ணிக்கப்படுபவர் அமிதாப் பச்சன். ஏராளமான சாதனைகளுக்குச் சொந்தக்காரர். 40 ஆண்டுகளாக சினிமாவில் கோலோச்சி வருபவர். இன்றும் பாக்ஸ் ஆபீஸில் தன் ஆதிக்கத்தை செலுத்தி வரும் அமிதாப்புக்கு இன்று 69 வயது பிறக்கிறது.
ஆனால் இந்தப் பிறந்த நாளை அவர் ஆடம்பரமாகக் கொண்டாடவில்லை. "பிறந்த நாளைக் கொண்டாட சிறந்த வழி, செய்யும் வேலையை ஒழுங்காக நிறுத்தாமல் செய்வதுதான்," என்கிறார் அமிதாப்.
இப்போது ராம்கோபால் வர்மாவின் டிபார்ட்மெண்ட் மற்றும் சோனி டிவியில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி நடத்துதல் என மிக பரபரப்பாக உள்ளார்.
பிறந்த நாளுக்காக கேக் வெட்டினாரா அமிதாப்?
ஆம்… நேற்று நள்ளிரவு ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பிய அமிதாப், சரியாக 12 மணிக்கு கேக் வெட்டி குடும்பத்துடன் எளிமையாக தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
பின்னர் உலகம் முழுவதிலுமிருந்து வந்த அவரது ரசிகர்களின் வாழ்த்துக்களைப் பெறுவதிலும் பதிலுக்கு நன்றி சொல்வதிலும் அவரது நேரம் கழிந்ததாம்.
"மற்றவர்களின் எளிய வாழ்த்துக்களைப் பெறுவதிலும், அவர்களுக்கு பதில் சொல்வதிலும் தனி ஆனந்தம் உள்ளது. இந்தப் பிறந்த நாளுக்கு என்ன செய்தி சொல்கிறீர்கள் என எல்லோரும் கேட்கிறார்கள். ஏன் பிறந்த நாளன்று மட்டும்தான் சொல்ல வேண்டுமா என்ன… எல்லா நாளும் நான் விரும்புவது அன்பும் அமைதியும்தான். அது எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்," என்கிறார் அமிதாப்.
அரசியல், சினிமா, சமூக நல அமைப்புகளைச் சார்ந்த பலரும் அமிதாப்புக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
Post a Comment