இன்டர்நெட் மற்றும் உடனடி செய்தி பரிமாற்ற வசதிகள் அடங்கிய பிளாக்பெர்ரி செல்போன்களை கனடாவைச் சேர்ந்த 'ரிசர்ச் இன் மோஷன்' என்ற நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா என உலக நாடுகளில் சீனா, ஜப்பான் தவிர மற்ற நாடுகளில் இந்த செல்போன் பிரபலமாக உள்ளது. இதில் அனுப்பப்படும் மெசேஜ்களை அவ்வளவு எளிதில் மற்றவர்கள் படிக்க முடியாது என்பதால் இதற்கு தனி வரவேற்பு உள்ளது.
இந்தியாவில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் பிளாக்பெர்ரி செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
பிளாக்பெர்ரி மெசேஜ்களை படிக்கும் வசதி தொடர்பாக மத்திய அரசுக்கும் 'ரிசர்ச் இன் மோஷன்' நிறுவனத்துக்கும் இடையே பிரச்னை எழுந்தது.
மெசேஜ்களை படிக்கும் வசதியை தராவிட்டால் பிளாக்பெர்ரி போனுக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்ததை தொடர்ந்து அந்த வசதியை அளிக்க பிளாக்பெர்ரி முன்வந்தது.
இந்நிலையில் இந்திய நேரப்படி நேற்று பகல் 3.30 மணியிலிருந்து பிளாக்பெர்ரி செல்போனில் இன்டர்நெட் மற்றும் மெசேஜ் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனால் உலகம் முழுவதும் உள்ள பிளாக்பெர்ரி வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வாடிக்கையாளர்கள் பேஸ்ஃபுக் மற்றும் டுவிட்டரில் தங்கள் புகாரை பதிவு செய்துள்ளனர்.
பிளாக்பெர்ரியில் அனுப்பப்படும் மெசேஜ்கள் கனடாவில் உள்ள சர்வர் வழியாக மற்றவர்களுக்கு செல்லும். இந்த சர்வரில் ஏற்பட்டுள்ள சிறிய பழுதுதான் பிரச்னைக்கு காரணம் என பிளாக்பெர்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது. 'ஓரிரு நாளில் பிரச்னை சரி செய்யப்பட்டுவிடும் என நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment