களைகட்டி வரும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதை அறிய இன்னும் ஒரே ஒரு நாள் காத்திருந்தால் போதும். அதற்குள் யார் சட்டையும் கிழியாமலிருக்க ஆண்டவனை பிரார்த்திப்பதை தவிர வேறு வழியில்லை. இரு தரப்பும் ஒருவர் மீது மற்றவர் சுமத்திக் கொள்ளும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆக்ரோஷத்திற்கும் அளவே இல்லை. எல்லா தயாரிப்பாளர்களுக்கும் அரை கிரவுண்ட் நிலம் இலவசம் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார் எஸ்.ஏ.சி.
இது குறித்து கருத்து தெரிவிக்கும் கேயார், அப்படி கொடுத்தால் சுமார் 25 கோடியாவது தேவைப்படும். சங்கத்தில் இருப்பது ஒரு கோடிதான். மீதமுள்ள பணத்திற்கு விஜய் மூன்று படங்களுக்கு சம்பளம் வாங்காமல் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கால்ஷீட் கொடுத்தால்தான் முடியும் என்கிறார். அடிக்கடி விஜய்யையும் இந்த விஷயத்தில் இழுப்பதால் பெரும் கோபத்திற்கு உள்ளாகியிருக்கும் எஸ்.ஏ.சி நறுக்கென்று ஒரு பதிலையும் சொல்கிறார்.
விஜய் விஜய்ன்னு சொல்றாங்க. அவரை நான் ஒண்ணும் சும்மா சாதாரணமாக சினிமாவுக்குள் கொண்டு வந்து விடல. எத்தனை நிலத்தை விற்றிருப்பேன், எத்தனை வீடுகளை விற்றிருப்பேன் என்று எனக்குதான் தெரியும். நான் தேர்தலில் நிற்கிறேன்னா என்னை பற்றி மட்டும்தான் பேச வேண்டும். விஜய் இப்போதான் சினிமாவுக்கு வந்தார். நான் முப்பந்தைந்து வருஷமா சினிமாவில் இருக்கேன். எந்த விநியோகஸ்தரையும் ஏமாற்றியதில்லை. எந்த டெக்னிஷியனுக்கும் சம்பள பாக்கி வைத்ததில்லை. இந்த தேர்தலில் தகுதியோடதான் நிற்கிறேன். நேரடியாக என்னுடன் மோதுவதை விட்டுட்டு என் மகன் விஜய்யை இதில் இழுப்பது கொஞ்சம் கூட சரியில்லை என்றார் ஆவேசமாக. இதற்கிடையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த எஸ்.ஏ.சி தனது தலைமையில் இயங்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரிக்கப் போவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். திருச்சி இடைத் தேர்தலிலும் விஜய் ரசிகர்கள் அதிமுக வின் வெற்றிக்கு பாடு பட வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
Post a Comment