ஆபாசமாக நடித்ததற்காக 1 ஆண்டு சிறையும், 90 கசையடியும் விதிக்கப்பட்ட ஈரான் நடிகை மர்ஜியா வபாமெஹர் கடந்த திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டார். 90 கசையடியும் ரத்து செய்யப்பட்டது.
'மை டெஹ்ரான் ஃபார் சேல்' என்ற படத்தில் ஆபாசமாக நடித்ததற்காக நடிகை மர்ஜியா வபாஹெர் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இந்த படம் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.
இந்த படம் ஆஸ்திரேலியாவுடன் கூட்டாக சேர்ந்து எடுக்கப்பட்டது. டெஹ்ரானில் உள்ள ஒரு நாடக நடிகையை அதிகாரிகள் நடிக்கவிடாமல் தடை செய்கிறார்கள். இதையடுத்து அந்த நடிகை தலைமறைவாக வாழ்கிறார். பின்னர் நாடு கடத்தப்பட்ட ஒருவரின் உதவியோடு ஈரானை விட்டு வெளியேறுகிறார் என்பது தான் கதை.
இதில் மர்ஜியா இஸ்லாமிய சட்டத்தை மீறி ஆபாசமாக நடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜூலை மாத இறுதியில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தான் அவருக்கு 90 சவுக்கடியும், 1 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த படத்தில் மர்ஜியா ஒரு காட்சியில் தலையில் துணியில்லாமலும், இன்னொரு காட்சியில் மது அருந்துவது போலவும் வந்ததற்காகத் தான் இந்த தண்டனை.
மர்ஜியாவின் ஓராண்டு தண்டனையை 3 மாதங்களாக குறைத்த நீதிமன்றம் கசையடியை ரத்து செய்தது. அதன்படி அவர் கடந்த திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
'மை டெஹ்ரான் ஃபார் சேல்' படத்தை ஈரானில் திரையிட அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் சட்டவிரோதமாக அந்த படம் வினியோகிக்கப்பட்டுள்ளது என்று பார்ஸ் நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
பிபிசியுடன் சேர்ந்து பணியாற்றியதற்காக ஈரானில் கடந்த மாதம் மட்டும் 6 இயக்குனர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment