கன்னட நடிகர் தர்ஷனும், அவரது மனைவி விஜயலட்சுமியும் சேர்ந்து, நடிகை நிகிதாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளனர். தங்களது பிரச்சினையில் தேவையில்லாமல் நிகிதாவின் பெயரை இழுத்து விட்டதற்காக அவர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர்.
கன்னடத்தில் நடித்து வந்த நிகிதாவை மையமாக வைத்து சமீபத்தில் பெரும் புயல் கிளம்பியது. நடிகர் தர்ஷன், தனது மனைவி விஜயலட்சுமியுடன் கடும் சண்டையி்ல் இறங்கினார். மனைவியைத் தாக்கிய அவர் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக புகார் கூறப்பட்டது. தர்ஷன், விஜயலட்சுமி இடையிலான மோதலுக்கு நடிகை நிகிதாதான் காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால் நிகிதா இதை மறுத்தார்.
இந்த விவகாரத்தில்தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையி்ல் அடைக்கப்பட்டார். மேலும் நிகிதாவுக்கு கன்னட திரையுலகில் தடையும் விதித்தனர். பின்னர் அதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அது விலக்கிக் கொள்ளப்பட்டது.
பிறகு கோர்ட்டில் தர்ஷனுக்கும், விஜயலட்சுமிக்கும் நீதிபதி அறிவுரை கூறினார். அதையடுத்து மனைவியிடம் மன்னிப்பு கேட்டார் தர்ஷன். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் மனைவியுடன் சேர்ந்து நிகிதாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார் தர்ஷன்.
இதுகுறித்து விஜயலட்சுமி கூறுகையில், தேவையில்லாமல் எங்களது பிரச்சினையில் நிகிதாவின் பெயர் இழுக்கப்பட்டு விட்டது. இதற்காக வருந்துகிறேன், மன்னிப்பு கோருகிறேன். இருப்பினும் நான் ஒருமுறை கூட நிகிதாதான் எனது பிரச்சினைக்குக் காரணம் என்று நான் கூறியதே இல்லை. போலீஸில் கொடுத்த புகாரிலும் கூட அதை கூறவில்லை. வேறு எந்தப் பெண்ணின் பெயரையும் நான் குறிப்பிடவில்லை.
எங்களது பிரச்சினைக்கு நாங்கள்தான் காரணம். இதற்காக யார் மீதும் பழி போட நாங்கள் விரும்பவில்லை. நிகிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்காக நான் வருந்துகிறேன். அவரது வாழ்க்கை பெரும் சிக்கலாகி விட்டதற்காக நான் வேதனைப்படுகிறேன். அவருக்கு நடிக்க தடை விதித்தது குறித்து எனக்கு முதலில் தெரியாது. எல்லாம் கண்இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது என்றார்.
அதேபோல தர்ஷனும் நிகிதாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறினார்.
Post a Comment