Monday, 31 October 2011
சென்னையில் ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரிலும், பல்வேறு கவர்ச்சிகரமான பெயர்களிலும் விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து விபசார தொழில் செய்வதை தடுத்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங் ஆகியோர் விபசார தடுப்பு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் கிங்ஸ்லின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் ஆயுர்வேத மசாஜ் என்று கவர்ச்சிகரமாக பத்திரிகையில் விளம்பரப்படுத்தி இருந்த ஒரு சென்டரின் மொபைல் எண்ணுக்கு போன் செய்து வாடிக்கையாளர் போல் பேசினர்.
எதிர் முனையில் பேசிய நபர் நவீன முறையில் மசாஜ் செய்கிறோம் விருப்பப்பட்டால் மசாஜ் செய்யும் பெண்களோடு உல்லாசமாக இருக்கலாம். அதற்கு ரூ. 5 ஆயிரம் செலவாகும் என்றார். மேலும் அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள ஒரு பியூட்டிபார்லருக்கு பணத்துடன் வருமாறு அழைத்தார்.
இதையடுத்து போலீசார் அந்த இடத்துக்கு மாறு வேடத்தில் சென்றனர். அவர்களை ஒரு வாலிபர் பியூட்டிபார்லருக்குள் அழைத்து சென்றார். இதையடுத்து அங்கு விபசாரம் நடப்பதை உறுதி செய்த போலீசார் அதிரடியாக உள்ளே புகுந்து 2 வாலிபர்களை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பிஸ்வாஸ்பரதன், சுராஜ் என்பது தெரிந்தது. மேலும் விபசாரத்திற்கு ஈடுபடுத்த வைத்திருந்த ஆந்திரா மற்றும் மணிப்பூரை சேர்ந்த 3 இளம்பெண்ணை போலீசார் மீட்டனர். அவர்கள் மைலாப்பூர் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
பியூட்டி பார்லரை நடத்தி வந்த சாருலதா என்ற மகாலட்சுமி தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர் மீது கடந்த ஆண்டு சென்னை ஷெனாய்நகரில், மசாஜ் சென்டர் பெயரில் விபசாரத்தில் ஈடுபட்ட போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.