
இலியானா தமிழில் இரண்டு படங்கள் (கேடி, நண்பன்) செய்திருக்கிறார் இதுவரை. ஆனால் அவருக்கோ, அவரை வைத்து படமெடுத்தவர்களுக்கோ, அட குறைந்தபட்சம் ரசிகர்களுக்கோ… அந்தப் படங்கள் நல்ல அனுபவமாக அமையவில்லை!அதனால்தானோ என்னமோ… அம்மணிக்கு கோலிவுட் என்றால் வேப்பங்காயாக கசக்கிறதாம். தமிழில் மேற்கொண்டு நடிக்கவும் அவர் விரும்பவில்லையாம்.
தேடி வந்து தேதி கேட்ட இரண்டு முன்னணி தயாரிப்பாளர்களிடம் சாக்குப் போக்கு சொல்லி அனுப்பிவிட்டு, இரண்டு இந்திப் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டாராம்.
இதற்கிடையே, தமிழ் சினிமா பிடிக்காது… தமிழ் சினிமா தயாரிப்பாளர் கொடுத்த அட்வான்ஸ் மட்டும் பிடிச்சிருக்கோ என கோபக் குரல் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் மோகன் நடராஜன்.
விக்ரமும் இலியானாவும் நடிப்பதாக முன்பு அறிவிக்கப்பட்ட ஒரு படத்துக்காக கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் இது. அந்தப் படம் ட்ராப் ஆகிவிட்டது. கொடுத்த அட்வான்ஸ் பணம் ரூ 50 லட்சத்தை அப்படியே மறந்துவிட்டாராம் இலியானா.
படத்தில் நடிக்கவில்லை என்றாகிவிட்டது. நான் கொடுத்த அட்வான்ஸ் என்னாச்சு… உடனடியாக எண்ணி வைக்கணும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் மோகன் நடராஜன்.
படத்தில் நடிக்க கோடம்பாக்கம் வரப் பிடிக்கலன்னாலும், இந்த பஞ்சாயத்துக்கு இலியானா கண்டிப்பா வந்தாகணுமில்ல!
home
Home
Post a Comment