தமிழக அமைச்சரவை நேற்று முன்தினம், மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது. இதில், யாரும் எதிர்பாராதவிதமாக, திருச்சி மாவட்டம் முசிறி தொகுதியைச் சேர்ந்த, எம்.எல்.ஏ., சிவபதி மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, முக்கிய துறையான பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவர், திருச்சி புறநகர் மாவட்ட செயலராகவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். புறநகர் மாவட்ட செயலர் பதவிக்கு, கடந்த டிசம்பரில் தான், முன்னாள் அமைச்சர், கே.கே.பாலசுப்பிமணியன் நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்ட ஒரே மாதத்தில், அவருக்கு மாவட்ட செயலர் பதவியிலிருந்து கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதத்துக்கு முன், மாவட்ட செயலர் பதவி மற்றும் அமைச்சர் பதவியிலிருந்து கல்தா கொடுக்கப்பட்ட சிவபதிக்கு, மீண்டும் அப்பதவிகள் தேடிவந்தது, கட்சியினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, அ.தி.மு.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சிவபதி, மூன்று மாதங்களுக்கு முன், மாவட்ட செயலர் மற்றும் அமைச்சர் பதவியை அடுத்தடுத்து இழந்தார். சசிகலா கணவர் நடராஜன் தம்பி ராமச்சந்திரன் மூலம் தான் இவர், எம்.எல்.ஏ., மாவட்ட செயலர் மற்றும் அமைச்சர் பதவிகளைப் பிடித்தார் என்ற பேச்சு, கட்சியினர் மத்தியில் பரவலாக எழுந்தது. கடந்த, டிசம்பர் 19ம் தேதி, சசிகலா அண்ட் கோ, அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டது. அதன் பின், தன்னிடம் சசிகலா அண்ட் கோ (திவாகரன், ராவணன்) ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டது; நான் கொடுக்கவில்லை என்ற காரணத்தால் தான், மாவட்ட செயலர் மற்றும் அமைச்சர் பதவியை இழந்தேன் என்று புகார் கூறி, முதல்வர் ஜெயலலிதாவிடம், சிவபதி கடிதம் கொடுத்துள்ளார்.
அந்த கடிதத்தில், மேற்சொன்ன பணத்தை பரஞ்ஜோதி கொடுத்து, மேற்கு தொகுதி இடைத்தேர்தலில், எம்.எல்.ஏ., சீட், மாவட்ட செயலர், அமைச்சர் பதவியை பிடித்தார் என்றும் புகார் கூறியிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், உளவுத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சிவபதி கூறியதில் உண்மை இருப்பதாக தெரிந்ததால், உடனடியாக அவரிடமிருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலர் பதவியும், அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இவர், மாவட்ட செயலர் மற்றும் அமைச்சர் பதவியில், முறையாக செயல்படவில்லை என்று புகார் இருந்த நிலையிலும், திவாகரன் மீதுள்ள கோபம் காரணமாகவே, மீண்டும் சிவபதிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. பரஞ்ஜோதி மீது அவர் கொடுத்த புகார் நிரூபணம் ஆனதாக தெரிவதால், அவருக்கு, ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் பதவியிலிருந்து விரைவில் கல்தா கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
தற்போது, புறநகர் மாவட்ட செயலராக பதவியேற்ற பாலசுப்பிரமணியன் மீது, பெரிதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றாலும், கட்சியினர் சிலர், அவர் மீது சில புகார்களை, கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளனர். பொதுவாக, அமைச்சர் பதவி கொடுப்பவர்களுக்கு, அந்தந்த மாவட்ட செயலர் பதவியும் சேர்த்து வழங்குவதை, முதல்வர் ஜெயலலிதா வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆகையால் தான், அமைச்சர் பதவியுடன், புறநகர் மாவட்ட செயலர் பதவியும் சேர்த்து சிவபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சராக ஆசைப்பட்ட கு.ப.கிருஷ்ணனுக்கு "செக்': திருச்சி மாவட்டத்தில் முத்தரையர் பெரும்பான்மையாக இருப்பதால், அந்த சமுதாயத்துக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சிவபதிக்கும், அடுத்ததாக பரஞ்ஜோதிக்கும், அடுத்தடுத்து அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இருவரும் அடுத்தடுத்து அமைச்சர் பதவியை இழந்ததும், முத்தரையர் சமுதாயத்தில் யாருக்கும் அமைச்சரவையில் இடம் இல்லாமல் இருந்தது. இதனால், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருக்கும், கு.ப.கிருஷ்ணனுக்கு, முத்தரையர் சமுதாய கோட்டாவில் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பரவலாக பேசப்பட்டது. அதுபோன்ற வதந்திகள் அடிக்கடி பரவியது. இந்நிலையில், சிவபதி மீண்டும் அமைச்சராகியுள்ளதால், கு.ப.கிருஷ்ணன் அமைச்சர் கனவுக்கு, "செக்' வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment