திமிர் கொண்டபடி
துருத்திக் கொண்டிருக்கும் தனங்களும்
நத்தை போல நீண்டிருக்கும்
பெண் குறி பற்றிய வர்ணிப்புக்களும்
இப்போது ஆணாதிக்கத்திற்கு எதிரான
வீரியம் மிக்க எழுத்துக்களாக
தமிழ் உலகில் பரிணமித்துள்ளது!
எது கவிதை என கவிஞர்கள் பலர் ஏகாந்தப் பொழுதுகளில் தூக்கம் தொலைத்து
பொது வெளியில் மேடையிட்டு - விவாதம் செய்து
ஆராய்ச்சி நடாத்துகையில்
இது கவிதை எனவும், அடக்கு முறைக்கு எதிரான
இராப் பாடல் இதுவெனவும் முழக்கமிடுகின்றனர் சிலர்!
இறக்கை விரித்து உலகில்
எமைச் சூழ்ந்திருக்கும் இன்னல் களைந்து
பறக்க நினைக்கும் பெண்களின் பார்வைகளை
இப்போது ஆண் குறியும், பெண்குறியும்
அந்தரங்க கவிதைகள் மூலம் புரட்சி செய்ய வைக்கின்றது!
ஆணாதிக்கத்திற்கான எதிர்வினைகளும்,
அடக்கு முறைக்கான சீழ்க்கை ஒலிகளும்
இன்றைய பொழுதில் அந்தரங்க உறுப்புக்களின்
அர்த ஜாம கீதமாக அரங்கேற்றம் பெறுகின்றது!
தட்டிக் கேட்டால் தமிழ் கவிதையின் வீரியம் இதுவென
எட்டி உதைக்கின்றன குறிக் கவிஞர்களின் வார்த்தைகள்!
வண்டுகள் சூழ்ந்திருக்கும் இன் மலர் தோட்டத்தை
கண்டு தேன் பருகிட துடித்து
கன்றுகள் பல காத்திருக்கும் பொழுதுகளில்
நண்டு போல் புடைத்திருக்கும்
நமது உறுப்புக்களின் அங்க வர்ணனை இதுவென
நாள் தோறும் பேரிகை முழங்குகின்றது!
கொண்டதோர் கொள்கை! கவிதைக்கான வீரியம் இதுவென
மண்டியிட்டு புதிய பரணி பாடுகின்றது 21ம் நூற்றாண்டு இளம் சமூகம்!
ஆண் குறியையும், அந்தரங்க உறுப்புக்களையும்
அடிக்கடி எம் படைப்புகளில் செருகி
அழகு தமிழ் கவிதை படைத்தால்
ஆதிக்க விலங்கு அறுந்து
அழகு நங்கையர் வாழ்வு சிறக்கும் என
அர்த்தங்கள் சொல்கின்றன இன்றைய
அங்க வர்ண்ணை கவிதைகள்!
ஆணாதிக்கத்திற்கு எதிரான
சிறகு உடைக்கும் வடிவில்
அடிக்கடி காதுகளை துளைத்தெடுக்கிறது
அங்க வர்ணனை வார்த்தைகள் - அட
இப்படியும் தமிழ்ச் சமூகத்தில்
பெண் விலங்கை உடைக்கலாம் என
செப்படி வித்தைகளை காட்டுகின்றது
புதியதோர் இலக்கியப் பரம்பரை!
Post a Comment