"எனது தொகுதி அலுவலகம் பறிக்கப்பட்டால், கொளத்தூர் மையப் பகுதியில், எங்கேயாவது ஒரு நடைபாதையின் நடுவே மேஜை, நாற்காலி போட்டு, என் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த மக்களுக்கு கடமையாற்றுவேன்' என, தி.மு.க., பொருளாளரும், கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கொளத்தூர் தொகுதியில், ஜவகர் நகர், முதல் வட்டச் சாலையில், 2001ம் ஆண்டு கட்டப்பட்டு, எவ்வித பயன்பாடும் இல்லாமல் இருந்த, பழைய கட்டடம் ஒன்றைச் சீர்படுத்தி, மாநகராட்சி நிர்வாகத்தினர், எனக்கு தொகுதி அலுவலகமாக வழங்கினர். அன்று முதல், சென்னையில் நான் இருக்கும் சமயங்களில், வாரத்துக்கு இரண்டு, மூன்று முறை அலுவலகம் சென்று, பொதுமக்களின் குறைகளைக் கேட்டு, அவற்றை நிவர்த்தி செய்து வருகிறேன். மேலும், இரண்டு பேரை நிரந்தரமாய் அங்கே பணியில் அமர்த்தி, முழு நேரமும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றை உரிய துறைகளுக்கு அனுப்பி, தீர்வு காணும் நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதைச் சகித்துக்கொள்ள முடியாத அ.தி.மு.க., அரசு, அந்த அலுவலகத்தை ஒதுக்கீடு செய்தது தவறு என்றும், மீண்டும் மாநகராட்சியைக் கூட்டி, விவாதித்து, முடிவெடுத்து அனுப்பும்படியும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர், அப்போதைய மேயர் சுப்பிரமணியனுக்கு கடிதம் எழுதியிருந்தார். அவர் தலைமையில் மன்றம் கூடி, "அந்த அலுவலகம் அங்கேயே தொடர வேண்டும்' என்ற, மன்றத்தின் குறிப்பு, முறைப்படி அரசு செயலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதைப் போல, குறுகிய கண்ணோட்டம் கொண்ட ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு சிலரின் தூண்டுதலின்படி, அ.தி.மு.க., அரசு, அந்த அலுவலகத்தைக் காலி செய்ய தீர்மானம் கொண்டு வந்துள்ளது. எம்.எல்.ஏ., என்ற வகையில், எனது தொகுதி மக்களுக்கு கடமையாற்றும் அந்த அலுவலகம் பறிக்கப்பட்டால், கொளத்தூர் மையப் பகுதியில், எங்கேயாவது ஒரு நடைபாதையின் நடுவே மேஜை, நாற்காலி போட்டு, என் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த மக்களுக்கு கடமையாற்றுவேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று விசாரணை: இதற்கிடையே கொளத்தூர் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் குறுக்கீடு செய்ய தடை கோரி, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு நீதிபதி தனபாலன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. ஸ்டாலின் சார்பில் வழக்கறிஞர் என்.ஜோதி, மாநகராட்சி சார்பில் அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகினர். தற்போதைய நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை 23ம் தேதிக்கு (இன்று) நீதிபதி தனபாலன் தள்ளி வைத்தார்
Post a Comment