தியேட்டர்களில் எப்பவும் போல இரவு காட்சிகள் தொடரும் என்றும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். தியேட்டர்களில் இரவு காட்சிக்கு கூட்டம் குறைந்து கொண்டே வருவதாலும், பெண்களின் பாதுகாப்பு கருதியும் இரவு நேர காட்சியை ரத்து செய்ய தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்துள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானது. மேலும் பெங்களூரை போன்று காலை காட்சியை 11மணிக்கும், பகல் காட்சியை 2மணிக்கும், மாலை காட்சியை 4மணிக்கும், இரவு காட்சியை 7மணிக்கு நடத்துவது தொடர்பாகவும், தியேட்டர் உரிமையாளர்கள் தலைமையில் கடந்த சில நாட்களாகவே பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இந்நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தியேட்டர்களில் இரவு காட்சியை ரத்து செய்யும் எண்ணம் எதுவும் இல்லை. வழக்கம் போல இரவு காட்சி நடக்கும். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். என்று கூறியுள்ளார்.
இதனிடையே முல்லை பெரியாறு பிரச்சனை தொடர்பாக மதுரை, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதில் தியேட்டர் அதிபர்களும் பங்கேற்றுள்ளனர். இதனால் தியேட்டர்களில் காலை மற்றும் பகல் நேர காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Post a Comment