முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக - கேரளா இடையேயான வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வேளையில், மணல் கடத்தல் கும்பலின் லாரிகள் மட்டும் எவ்வித பாதிப்பும் இல்லாமல், கேரளா வுக்கு பறந்து கொண்டிருக்கின்றன.
கேரளாவிலுள்ள நீர் நிலைகளில் மணல் அள்ள அந்த மாநில அரசு தடை விதித்துள்ளதால், அங்கு கட்டட கட்டுமான பணிக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் திருச்சி, கரூரில் இருந்து தினமும் எண்ணற்ற லாரிகளில் பல்லடம், செட்டிபாளையம், வேலந்தாவளம் வழியாக கேரளாவுக்கு அதிகளவில் மணல் கடத்தப்படுகிறது. தவிர, கிணத்துக்கடவு செக்போஸ்ட், சொக்கனூர் வழியாகவும், முத்துக்கவுண்டனூர் , பாலார்பதி, அனுப்பூர் வழியாகவும் கடத்தப்படுகிறது. கடந்த தி.மு.க.,ஆட்சியின்போது மணல் கடத்தல் லாரிகள், போலீசாரிடம் பிடிபடாமல் "பாதுகாப்பாக' தமிழக எல்லையை கடந்து கேரளாவுக்குள் செல்ல ஏதுவாக, கடத்தல்காரர்கள் "பைலட்' வாகனங்களை, தி.மு.க., கொடியுடன் இயக்கினர். இந்த வாகனங்களில் சென்ற நபர்கள், போலீசார் மற்றும் செக்போஸ்ட் அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்து, மணல் கடத்தல் லாரிகளை கேரளாவுக்குள் அனுப்பி வந்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் மணல் கடத்தல் தடுக்கப்படவில்லை. கடத்தல்காரர்கள், அ.தி. மு.க., கொடி கட்டிய வாகனங்களில் பறக்கின்றனர். கடத்தல் "ரூட்'களில் இருக்கும் கிராமங்களைச் சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கும் மாமூல் போவ தாக கூறப்படுகிறது.
புது டெக்னிக்: தமிழக பதிவு எண்களுடன் கூடிய லாரிகளில் மணல் கடத்துவதில் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளதால், தற்போது ஆந்திரா, புதுச்சேரி பதிவு எண்களை கொண்ட லாரிகளை கடத்தல் ஆசாமிகள் பயன்படுத்துகின்றனர். அதிகாரிகள் வழிமறித்தால், போலி பர்மிட் உள்ளிட்ட ஆவணங்களை காட்டி தப்பி விடுகின்றனர். லாரியில் கடத்தப்படும் மணல் மீது தார்பாலின் போட்டு மறைத்து, அதன்மேல் "கிரஷர் டஸ்ட் மண்' (கருப்பு மண்) போட்டு மூடி கடத்துகின்றனர். கடத்தல் லாரிகளின் அதிகபட்ச போக்குவரத்து காரணமாக, பல்லடம் - வேலந்தாவளம் ரோடு, கிணத்துக்கடவு செக்போஸ்ட் - வீரப்பகவுண்டனூர் செக்போஸ்ட் வரையிலான ரோடு கடுமையாக சேதமடைந்துள்ளது.
முல்லைப்பெரியாறு விவகாரம் தொடர்பாக தற்போது தமிழக - கேரள இடையேயான வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள போதிலும், மணல் கடத்தல் லாரிகள் மட்டும் எவ்வித இடையூறும் இல்லாமல் சென்றுவருகின்றன. இதற்கு காரணம், கடத்தல் வாகனங்களின் ஒரிஜனல் பதிவு எண் பலகைகள் (நெம்பர் பிளேட்) மோசடியான முறையில் மாற்றப்பட்டு ஆந்திரா, கர்நாடக ரெஜிட்ஸ்ரேஷன் எண்களுடன் பவனி வருவதாக கூறப்படுகிறது. மணல் கடத்தல் தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
Post a Comment