ரூ 6 லட்சம் பணத்துக்காக கொடுத்த காசோலைகள் பணமின்றி திரும்பிய வழக்கில் பிரபல இயக்குநர் சரணை கைது செய்ய சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான மோகன், ஜார்ஜ் டவுன் 7-வது கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "பால கிருஷ்ணன் என்ற ஆடிட்டர் மூலமாக சினிமா தயாரிப்பாளரும், இயக்குநருமான சரண் எனக்கு அறிமுகமானார்.
சில வழக்குகள் சம்பந்தமாக என்னுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டனர். அவர் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்காக நான் வாதாடியுள்ளேன். இதற்காக அவர் எனக்கு ரூ.6 லட்சம் பணம் தர வேண்டியுள்ளது. இந்த பணத்தை பலமுறை நான் திருப்பிக் கேட்டும் அவர் தரவில்லை.
இதற்காக அவர் கொடுத்த செக்குகளும் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டன. எனவே அவர் மீது செக் மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் நடந்து வருகிறது. 3 முறை சரண் சார்பில் அவரது வக்கீல் கோர்ட்டில் ஆஜராகி அவகாசம் கேட்டார். ஆனால் சரண் ஆஜராகவில்லை.
இதையடுத்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் சரணுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
வளசரவாக்கம் போலீசார் சரணை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 3-ந்தேதி மீண்டும் விசார ணைக்கு வருகிறது. இதையடுத்து சரண் எந்த நேரத்திலும் நீதிமன்றத்தில் சரணடையக்கூடும் எனத் தெரிகிறது.
Post a Comment