மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில், மத்திய அமைச்சர் அழகிரி கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி கட்டடங்களுக்காக, பாசனக் கால்வாய்களை சேதப்படுத்தியது குறித்து, 2012 ஜன., 4ல் ஆஜராகி விளக்கமளிக்க, அழகிரி, அவரது மனைவி காந்தி, மகன் தயாநிதிக்கு, கலெக்டர் சகாயம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளார். தயா பொறியியல் கல்லூரி, சிவரக்கோட்டை கரிசல்குளம் கண்மாய் அருகே உள்ளது. கல்லூரி கட்டடங்கள் கட்டும்போது, கண்மாய் பாசனக் கால்வாய்கள் மற்றும் சாகுபடி நிலங்களை சேதப்படுத்தியதாகவும், அதை மீட்கக் கோரியும் விவசாயிகள் நலச் சங்கச் செயலர் ராமலிங்கம், கலெக்டரிடம் ஏற்கனவே புகார் செய்தார்; ஐகோர்ட் கிளையில் வழக்கும் தொடர்ந்தார். அதை விசாரித்த ஐகோர்ட் கிளை, அழகிரி மற்றும் குடும்பத்திற்கு, நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற, கலெக்டருக்கு உத்தரவிட்டது.
மகாத்மா காந்தியின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, கலெக்டர் ஏற்கனவே சம்மன் அனுப்பினார். இதை எதிர்த்து, ஐகோர்ட் கிளையில் அழகிரி தரப்பில் மனு செய்யப்பட்டது. மகாத்மா காந்தி கூறிய வார்த்தைகளை நீக்கி விட்டு, மீண்டும் நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் பெற ஐகோர்ட் கிளை, கலெக்டருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் அழகிரி, அவரது மனைவி காந்தி, மகன் தயாநிதிக்கு, கலெக்டர் சகாயம் மீண்டும் இதுகுறித்து சம்மன் அனுப்பியுள்ளார்.
சம்மனில் கூறியிருப்பதாவது: டி.ஆர்.ஓ., ஆய்வு செய்ததில், கால்வாய்கள் சேதப்படுத்தப்பட்ட புகாரில் முகாந்திரம் இருப்பது தெரிகிறது. குறிப்பிட்ட சர்வே எண்களின் சாகுபடி நிலங்கள் மற்றும் கால்வாயை சேதப்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. போதிய சந்தர்ப்பம் அளிக்கும் வகையில், தகுந்த ஆதாரங்களுடன், ஜன., 4ல், பகல், 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது உங்கள் பிரதிநிதிகள் மூலமோ ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்.
இவ்வாறு சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment