News Update :
Home » » ராகவேந்திரா மண்டபம் கறுப்பு பணத்தால் கட்டப்பட்டது : இளங்கோவன்

ராகவேந்திரா மண்டபம் கறுப்பு பணத்தால் கட்டப்பட்டது : இளங்கோவன்

Penulis : karthik on Thursday 29 December 2011 | 04:13


அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருந்து வரும் ராகவேந்திரா திருமண மண்டபம் கறுப்பு பணத்தால் கட்டப்பட்டது,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார். காங்கிரஸ் கட்சியின், 127வது ஆண்டு தொடக்க விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. விழாவில் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிந்த பின் வெளியே வந்த இளங்கோவனை நிருபர்கள் சந்தித்து, "அன்னா ஹசாரே போராட்டத்திற்கு நடிகர் ரஜினி ஆதரவு தெரிவித்து, அவரது திருமண மண்டபத்தை உண்ணாவிரதம் இருக்க கொடுத்திருக்கிறாரே?' என்ற கேள்வியை கேட்டனர்.

இதற்கு பதில் அளித்து இளங்கோவன் கூறியதாவது: அன்னா ஹசாரேயை மிகப்பெரிய மனிதராக இந்த ஆண்டு துவக்கத்தில் ஊடகங்கள் சித்தரித்து காட்டின. ஆனால், அது உண்மை இல்லை. அவர் வெறும் புஸ்வாணம் என்பது, இந்த ஆண்டு இறுதியில் தெரிந்து விட்டது. அவரது போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர் என கூறப்பட்டது. ஆனால், மக்கள் ஆதரவு அவருக்கு கிடைக்கவில்லை. தற்போது அன்னா ஹசாரே காற்று போன பலூனாக இருக்கிறார். அவரை சுற்றியிருப்பவர்கள் கறுப்பு பணவாதிகள். அவரது ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருக்கும் ராகவேந்திரா திருமண மண்டபம் கறுப்பு பணத்தில் கட்டப்பட்டது தான். இவ்வாறு அவர் கூறினார்.

இளங்கோவனுக்கு இல.கணேசன் பதிலடி : ""நடிகர் ரஜினிகாந்த் கறுப்புப் பணம் வைத்திருப்பதாகப் புலம்பும், இளங்கோவன், மத்திய அரசைப் பயன்படுத்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?'' என, தமிழக பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன், கேள்வி எழுப்பினார்.

நேற்று, செய்தியாளர்களிடம், அவர் கூறியதாவது: இந்தியர்களின் சுதந்திரப் போராட்ட உணர்வை அடக்க, ஒரு வடிகாலாக ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது தான், இந்திய தேசிய காங்கிரஸ். அதன் தலைவராக இன்றும், ஓர் அன்னியர் தான் இருக்கிறார். இந்த வரலாறு தெரியாமல், பல காங்கிரஸ் நண்பர்கள் இதைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். முல்லைப் பெரியாறு விவகாரத்துக்கு, வீதிகளில் இறங்கி நடத்தப்படும் எந்தப் போராட்டமும் தீர்வாகாது. எத்தனை சொட்டு தமிழனின் ரத்தம், எத்தனை சொட்டு மலையாளியின் ரத்தம் சிந்தினாலும், ஒரு சொட்டு தண்ணீர் கூட கூடுதலாகக் கிடைக்கப் போவதில்லை. எனவே, நாட்டைத் துண்டாட நினைக்கும் சமூக விரோத சக்திகளின் தூண்டுதல்களுக்கு இரையாகிவிடாமல், இரு மாநில மக்களிடையே நிலவிவரும் உறவில் பிரச்னை வர அனுமதிக்கக் கூடாது. இதை வலியுறுத்தும் வகையில் தான், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட பா.ஜ.,வும், கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.,வும் இணைந்து, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு, நட்புச் சங்கிலி நிகழ்ச்சி நடத்தின. கேரளா பக்கம், கட்சியின் மாநிலத் தலைவர் முரளிதரனும், தமிழக தரப்பில் முன்னாள் தலைவர், சி.பி.ராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டனர்.

பிரதமர், மற்ற பிரச்னைகளைப் போலவே, இந்த பிரச்னையிலும் எந்த முடிவும் எடுக்காமல் தாமதித்து வருகிறார்.
இதே போல, காவிரி பிரச்னை எழுந்த போது, அப்போதைய பிரதமர் வாஜ்பாய், இரு மாநில முதல்வர்களை அழைத்து, அவர்களுடன் 7 மணி நேரம் பேச்சு நடத்தி, சுமுக ஒப்பந்தம் ஏற்பட வழி செய்தார். அதனால், அப்போது காவிரி பிரச்னை தீர்க்கப்படாவிட்டாலும், பெருமளவு பதட்டம் தணிந்தது. அதுபோன்ற எந்த நடவடிக்கையையும் மன்மோகன் சிங் செய்வதாகக் காணோம்.

"சுப்ரீம் கோர்ட் உத்தரவை நடைமுறைப்படுத்தாக கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்' என, வலியுறுத்துகிறோம். அவ்வாறு செய்தால், அடுத்து வரும் தேர்தலில், அதே அரசு அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் நிலை தான் இருக்கிறது. எனவே, அரசை டிஸ்மிஸ் செய்யப்படுவதோடு, அந்த முதல்வர், அடுத்த பத்தாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாதபடி தடையும் விதிக்கப்பட்டால், ஒருவேளை அவர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படலாம்.
"ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்துக்கு இலவசமாக மண்டபம் வழங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த் தான் நிறைய கறுப்புப் பணம் வைத்துள்ளார்' என, காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது பற்றி, ரஜினிகாந்த் தான் முடிவெடுக்க வேண்டும்.

அதேசமயம், இளங்கோவன் இருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சி தான், மத்தியில் ஆட்சி நடத்துகிறது. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, "அவர் வைத்திருக்கிறார், இவர் வைத்திருக்கிறார்' என, இளங்கோவன் புலம்புவது ஏன்? காரணம், காங்கிரஸ்காரர்கள் தான், நாட்டிலேயே அதிக கறுப்புப் பணம் வைத்துள்ளனர். அதனால் தான், தங்களிடம் முதலீடு செய்திருப்போரின் பட்டியலை வெளியிட சுவிஸ் வங்கிகளே தயாராக உள்ளபோதும், காங்கிரஸ் அரசு தயங்குகிறது. இவ்வாறு இல.கணேசன் கூறினார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger