மிஷ்கினின் பல நாள் கனவுதானாம் இந்த முகமூடி. எதையும் 'மூடி' மறைக்காமல் பேசும் மிஷ்கின், துவக்க நாளான அன்றும் அப்படியேதான் ஆரம்பித்தார் தனது உரையை. இதுவரைக்கும் நான் பார்த்த ஹீரோக்களிலேயே இப்படி ஒரு டெடிக்கேஷனான ஹீரோவை பார்த்ததே இல்லை. ஜீவாவிடம் இந்த கதையை சொல்லணும்னு நினைச்சேன். என் ஆபிஸ் வரைக்கும் வந்துட்டு போக முடியுமான்னு கேட்டேன். அவ்வளவுதான். அடுத்த பத்தாவது நிமிடத்தில் என் ஆபிசில் இருந்தார் ஜீவா.
மிஷ்கின் 'இடம் சுட்டி பொருள் விளக்கிய' இந்த இடத்தில் ஒளிந்து கிடக்கும் உண்மைகள், ஆரம்பத்திலிருந்து இந்த முகமூடி பிரசவத்தை கவனித்தவர்களுக்கு மட்டும் சட்டென்று புரிந்திருக்கும். (புரியாதவர்களுக்கு சில டேக்ஸ். கமல், அஜீத், எக்ஸட்ரா...) போகட்டும். விஷயத்துக்கு வருவோம்.
முகமூடி பற்றி நிறைய பேசினார் மிஷ்கின். நான் சின்ன வயசிலே நிறைய காமிக்ஸ் படிச்சிருக்கேன். அந்த கதைகளை படமாக்கணும்னு அப்பவே எனக்கு கனவு இருந்திச்சு. தமிழில் வெளிவரப்போகும் முதல் பிரமாண்ட சூப்பர்மேன் கதையா இந்த முகமூடி இருக்கும். இந்த படத்தை இந்த ஒரு பகுதியோட முடிக்கிற எண்ணமும் எனக்கு இல்லை. முகமூடி பார்ட் ஒன், டூ, த்ரின்னு அது பாட்டுக்கு போயிகிட்டே இருக்கும்னு நம்புறேன்.
இந்த படத்தில் ஜீவா கமிட் ஆனவுடன் குங்பூ கத்துக்கணும் என்றேன். எனக்கு ஏற்கனவே தெரியும். ரெண்டு வருஷம் அந்த சண்டையை நான் கத்து வச்சிருக்கேன் என்றார். என்னுடைய வேலை இன்னும் சுலபமாச்சு. ஜீவா 90 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் ஒரே ஷெட்யூலில் இந்த படத்தை முடிச்சு மே மாதம் திரைக்கு கொண்டு வந்துடலாம் என்றார்.
பின்னாலேயே பேச வந்த ஜீவா, 90 நாட்கள் என்ன, 120 நாட்கள் தருகிறேன் என்றார் மிஷ்கினுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதை போல. வழக்கமாக இருபெரும் நடிகர்கள் முட்டிக் கொள்ளும்போது இடம் கிடைத்தால் போதும். ஒரு வீச்சருவாவை செருகி பார்ப்பார்கள். இந்த முறையும் அதை மின்னல் வேகத்தில் செய்தார் ஜீவா.
மிஷ்கின் சார் அஞ்சாதே படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க என்னைதான் அழைச்சார். சரியா மீசை கூட முளைக்கல. நான் எப்படி போலீஸ் வேடத்தில் நடிக்கறது? அதுக்கெல்லாம் இன்னும் வயசு வரணும் என்பதால் அப்படத்தில் நடிக்கல என்றார்.
ஜீவாவின் 'ஒஸ்தி'யான பேச்சு புரியுதா பிரதர்ஸ்...?
பி(பெ)ண் குறிப்பு - இப்படத்தின் ஹீரோயின் பூஜா ஹெட்டே மிஸ் யுனிவர்சல் போட்டியில் மோதி முன்னேறி இறுதி வரைக்கும் வந்தவராக்கும்...!
Post a Comment