பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அப்சல் குருவின் கருணை மனுவை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து, ஜனாதிபதி தான் முடிவு செய்ய வேண்டும் என, மத்திய உள்துறை செயலர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, பார்லிமென்ட் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், பாதுகாப்புப் படை வீரர்கள் 7 பேர் உட்பட 13 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி அப்சல் குருவுக்கு, 2004ல் மரண தண்டனையை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி, சட்டப்படி அப்சல் குருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், அப்சல் குருவின் மனைவி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.
கடந்த ஜூலை 27ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சகம், ஜனாதிபதியின் செயலகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரிக்கும்படி அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. டில்லி அரசும் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஆதரித்தது. இது குறித்து, மத்திய உள்துறை செயலர் ஆர்.கே.சிங் குறிப்பிடுகையில், "அப்சல் குருவின் கருணை மனுவை ஏற்பதா? வேண்டாமா என்பதை ஜனாதிபதி தான் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.
Post a Comment