சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த நல்லப்பன் நடிகர் பிரசாந்த் நடித்த மம்பட்டியான் படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது தந்தை அய்யா துரை என்கிற மம்பட்டியான் வாழ்க்கையை தயாரிப்பாளரும், நடிகருமான தியாகராஜன் "மம்பட்டியான்" என்ற பெயரில் சினிமா படம் தயாரித்துள்ளார். இந்த படம் தயாரிப்பது குறித்து மம்பட்டியானின் வாரிசான என்னிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை. படத்தை தயாரிக்க உரிமையும் கொடுக்கவில்லை.
ஏற்கனவே மலையூர் மம்பட்டியான் என்ற பெயரில் வெளியான படத்தினால் எனது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இடையே பகை உணர்வு இருந்து வருகிறது. ஆகவே எனது கருத்தை கேட்காமல் படத்தை வெளியிடக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவிற்கு மம்பட்டியான் படத்தின் தயாரிப்பளார் நடிகர் தியாகராஜன் சார்பில் அவரது வக்கீல் ஆனந்தன் பதில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- மலையூர் மம்பட்டியான் படம் 1983-ம் ஆண்டு வெளியானது. அப்போது இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. படத்தின் தயாரிப்பாளர் சிவானந்தத்திடம் இருந்து 2008-ல் "காப்பிரைட்" பெற்று மம்பட்டியான் என்ற பெயரில் படம் தயாரித்துள்ளேன். ஆகவே மனுதாரர் எனது படத்திற்கு எதிராக வழக்கு தொடர உரிமை கிடையாது. 2009-ம் ஆண்டு முதல் இப்படம் பற்றி விளம்பரம் செய்து வருகிறேன்.
அப்போதெல்லாம் மனுதாரர் படத்திற்கு எதிராக வழக்கு தொடரவில்லை. ஆனால் படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பது விளம்பர நோக்கம் கொண்டது. மலையூர் மம்பட்டியான் படம் வெளியாகி 25 ஆண்டுகளாகி விட்டது. இப்போது தயாரிக்கும் மம்பட்டியான் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்நோக்கம் கொண்டது.
ஏற்கனவே இந்த படத்தின் பெட்டிகள் உலகம் முழுவதும் அனுப்பப்பட்டு விட்டது. வருகிற 16-ந்தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் படத்துக்கு தடை விதித்தால் வெளிநாட்டில் விற்கப்பட்ட படத்தின் பிரதி திருட்டு சி.டி.யாக இந்தியாவிற்குள் நுழைந்து விடும். இதன்மூலம் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு மிகவும் பாதிக்கப்படுவேன். எனவே நல்லப்பன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை 8-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி வினோபா முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
Post a Comment