கறுப்பு பணத்துடன் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதை மறுக்க முடியாது.கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளவர்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். பதுக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை மத்திய அரசு ரகசியமாக வைத்துள்ளதாக பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, கறுப்பு பணம் குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தபோது பேசினார்.
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டுக்கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என பா.ஜ., குற்றம்சாட்டி வந்தது. கறுப்பு பணத்திற்கு எதிராக பா.ஜ.,மூத்த தலைவர் அத்வானி ரதயாத்திரை மேற்கொண்டார். அவர் தனது ரத யாத்திரையின் போது கறுப்பு பணம் தொடர்பாக மத்திய அரசை குற்றம்சாட்டி வந்தார். கறுப்பு பணம் தொடர்பாக லோக்சபாவில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் என பா.ஜ., எம்.பி.,க்கள் அனைவரும், வெளிநாட்டு வங்கிகளில் பணம் எதையும் பதுக்கவில்லை என்பதை தெரிவிக்கும் அறிக்கையை லோக்சபா சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவரிடமும் அளித்தனர்.
கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளதாக பிரான்ஸ் நாட்டு அரசு இந்தியர்கள் 700 பேர் கொண்ட பட்டியலை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிகிறது. இதனை வெளியிட வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் கறுப்பு பணம் தொடர்பாக பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி லோக்சபாவில் ஓட்டெடுப்புடன் கூடிய ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது அவர் பேசியதாவது: கறுப்பு பணம் குறித்து அவையில் விவாதம் நடத்தப்படவில்லை. பணம் பதுக்கி வைத்துள்ள 782 பெயர்கள்மத்திய அரசு ரகசியமாக வைத்துள்ளது. அதிக வரி காரணமாக வெளிநாடுகளில் கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை திருப்பி கொண்டு வர வேண்டும். வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்துடன் பயங்கரவாதிகளுக்கு உள்ள தொடர்பு மறுக்க முடியாது. கடந்த 2010ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து வங்கிகளில் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி பணிகளுக்கு கறுப்பு பணம் பெரும் தடையாக உள்ளது. வெளிநாட்டில் பணம் பதுக்கவில்லை என எம்.பி.,க்கள் அனைவரும் உறுதி செய்ய வேண்டும். கறுப்பு பணம் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கறுப்பு பணம் பதுக்கியவர்களை பாதுகாப்பவர்கள் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்.
முறைகேடாக சொத்து சேர்த்து வைத்துள்ளவர்களை மத்திய அரசு தண்டிக்க வேண்டும். கறுப்பு பணம் பதுக்கியவர்கள் குறித்து பிரான்ஸ்அரசு கொடுத்துள்ள பட்டியலில் உளள்வர்களை மத்திய அரசு பாதுகாக்கக்கடாது. கறுப்பு பணம் பதுக்கி வைப்பதை தடுக்கும் வகையில் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இந்த தீர்மானத்திற்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மாலை 4 மணியளவில் பதிலளிக்க உள்ளார்.
இந்த விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் கட்சியின் மணிஷ் திவாரி, கறுப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளதற்கு மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி பொறுப்பேற்க முடியாது. சுவிட்சர்லாந்து நாட்டு சட்டப்படி கறுப்பு பணம் பதுக்கி வைத்தவர்களின் பெயர்களை வெளியிட முடியாது. பா.ஜ., அரசியல் நாடகம் நடத்துகிறது. பா.ஜ., கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வர முடியாது. கறுப்பு பணம் பாதுகாப்பான முறையில் பதுக்கி வைக்கப்படுகிறது என கூறினார்.
Post a Comment